நபிகள் வாழ்வில்: நச்சரவமாய் மாறி நிற்கும் செல்வம்

Report Print Kavitha in மதம்

“இதோ பாருங்கள்..! இறைவனின் வழியில் செலவு செய்யுங்கள் என்று உங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்படுகின்றது. இவ்விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டும் சிலர் உங்களில் இருக்கின்றனர்.

ஆனால், யார் கஞ்சத்தனம் காட்டுகிறாரோ, அவர் உண்மையில் தன் விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டிக் கொண்டிருக்கின்றார். இறைவனோ தேவைகள் அற்றவன். நீங்கள்தான் அவனிடம் தேவையுள்ளவர்களாக இருக்கின்றீர்கள்” என்று கொடுத்து வாழப் பணிக்கிறது திருக்குர்ஆன்.

படைப்பினங்களில் அழகிய படைப்பான மனித இனம் வறுமையில் சிக்கிக்கொண்டால் இறைவன் வழங்கிய உயரிய கண்ணியத்திலிருந்து அதளபாதாளத்தில் சரிந்து விழுமளவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

கந்தல் ஆடைகளோடு, உடல் அவயங்களையும் மறைக்க இயலாமல், ஒருவேளை உணவுக்கும் வழியின்றி தவிக்கும் நிலை மனித சமூகத்துக்கான எச்சரிக்கை மணி. இத்தகையவர்களிடம் இரக்கம் கொள்ளாமலிருப்பது என்பது இறைநம்பிக்கைக்கு நேர் எதிரானது. இறைநம்பிக்கையின் அடையாளம் என்பதே சக மனிதர்கள் மீதான இரக்கம் அன்றி வேறில்லை.

நபிகளாரின் அருளுரை

ஒருமுறை நபிகளார், ஏழை மனிதன் ஒருவனின் துயருற்றக் கோலத்தை கண்டு கலங்கிவிட்டார். கண்ணீர் பெருக்கெடுக்க அக்கணமே அனைவரையும் ஒன்று திரட்டினார். சக மனிதன் மீது இரக்கம் கொள்வது சம்பந்தமான ஒரு சிற்றுரையாற்றினார்.

மனதைப் பிசைந்தெடுக்கும் அந்த சொற்பொழிவில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சக மனிதர்கள் மீதுள்ள கடமைகளையும், உரிமைகளையும் நினைவூட்டினார். இந்த உரிமைகளும், கடமைகளும் நிறைவேற்றப்படாமல் பின்தள்ளப்படுவதனால் சமூகத்தில் ஏற்படும் அபாயகரமான பின்விளைவுகளையும் எடுத்துரைத்து எச்சரித்தார். அந்த அழகிய உரை அங்கு குழுமியிருந்தோரை உடனடியாகப் பாதித்தது.

அனைவரும் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் நபிகளாரின் திருமுன் கொண்டு வந்து குவித்து நின்றார்கள். யாருடைய வறுமை நிலையைக் கண்டு நபிகளார் நிலைகுலைந்து உரையாற்றினாரோ, அவர் அங்கிருந்து செல்லும்போது தன்னிறைவடைந்த ஒரு செல்வந்தரின் நிலையில் சென்றார் என்கிறது வரலாறு.

துயர் துடைக்கப் பயன்படாத செல்வம்

உபரியாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பொன்னும், பொருளும் தேவையுள்ளோரின் துயர்துடைக்கப் பயன்படவில்லை என்றால், அதனைக் கட்டியாள்பவரின் இம்மை, மறுமை ஈருலக வாழ்விலும் அது சோதனைப் பொருளாகவே மாறி நிற்கும். பொந்தில் பதுங்கியிருக்கும் நச்சரவம், வாய்ப்புக்காகக் காத்திருந்து இரையை வேட்டையாடுவது போன்றது இது.

“தன்னுடைய செல்வத்திலிருந்து அடுத்தவர் உரிமையைத் தராதபோது, அது மறுமையில் நச்சரவமாய் மாறி நிற்கும். அவரை விரட்டி விரட்டி துரத்திச் செல்லும். நீங்கள் மறைத்து வைத்திருந்த உங்கள் செல்வத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமேயில்லை!” என்றொரு குரல் ஒலிக்கும்.

இறுதியில், இனி தப்பிக்கவே வழியில்லை என்றொரு அவலநிலை அவருக்கு ஏற்படும். கடைசியில் அந்த இராட்சஸ பாம்புக்கு இரையாவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இல்லை” என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

- Thehindu

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்