புத்தர் அவதரித்த தினம் இன்று!

Report Print Kavitha in மதம்

இன்று சித்தார்த்த கௌதமர் பிறந்த நன்நாளாகும். இது இலங்கை பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும்.

இதனை இந்தியாவில் புத்த பூர்ணிமா, வைசாகம், இலங்கையில் வெசாக் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.

இவர் இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்துள்ளார்.

புத்த பூர்ணிமா மே மாத பௌர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.

"வெசாக்" மே மாத பௌர்ணமி நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு ஆகியவற்றை நினைவுறுத்தி இலங்கையில் பெளத்த சிங்களவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

சித்தார்த்த கௌதமர் பிறப்பு

கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான லும்பினி என்ற இடத்தில் பிறந்தார்.

சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். புத்தர் பிறந்த போது அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன.

ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.

தந்தையான அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார்.

அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.

அரண்மனையை விட்டு வெளியே சென்றார். தனது 29 வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார்.

ஆசைக்குக் காரணம் துன்பம் என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், நல்ல நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை,நன்முயற்சி, நற்சாட்சி, நல்ல தியானம் போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர்.

கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அது முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள்.

தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார்.

சித்தார்த்த கௌதமர் இறப்பு

இறுதியில் கி.மு. 483 ல் தனது 80 வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது.

புத்த பூர்ணிமா நாளானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாமும் அந்த மாதிரி நிலையை அடையலாம் என்று நமக்கு உணர்த்துகிறது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்