பிரமிடுகள் மூலமாக நோய்களை தீர்க்கும் விஞ்ஞானி

Report Print Kabilan in விஞ்ஞானம்

பிரமிடுகள் மூலமாக பல நன்மைகளை செய்ய முடியும் என கூறிவருகிறார் உக்ரைனைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர்.

அலெக்சாண்டர் கோலோட் எனும் விஞ்ஞானி, 1990ஆம் ஆண்டு முதல் பிரமிடுகளை உருவாக்கி வருகிறார்.

இதன் மூலமாக மருந்துகளின் தன்மையை அதிகரிக்க முடியும் எனவும், நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனவும் கூறும் அவர், 2001ஆம் ஆண்டில் ரஷ்யா மற்றும் உக்ரைனில் 17 பிரமிடுகளை கட்டியுள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் 50 பிரமிடுகளை கட்டுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இவரின் பிரமிடுகள் எகிப்திய பிரமிடுகளை விட அகலம் குறைவாகவும், உயரம் இரு மடங்கு அதிகமாகவும் இருக்கின்றன. பிவிசி குழாய்கள் மூலமாக பிரமிடின் சட்டங்களை உருவாக்கி, அவற்றின் மீது கண்ணாடி இழைகளால் மூடியிருக்கிறார்.

ஒவ்வொரு பிரமிடும் 144 அடி உயரமும், 55 டன் எடையும் கொண்டவை ஆகும். ஒரு பிரமிடை உருவாக்க 5 ஆண்டுகளுக்கு, 10 லட்சம் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரமிடுக்குள் எந்த உலோகங்கத்தைக் கொண்டு சென்றாலும், அதன் ஆற்றல் குறைந்து விடுகிறது அல்லது மறைந்துவிடுகிறது.

இது குறித்து அலெக்சாண்டர் கூறுகையில்,

‘என்னுடைய பிரமிடு மாஸ்கோவை காய்ச்சல், புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றிலிருந்து காப்பாற்றுகின்றது. நோயாளிகள் இங்கே வந்தால், நோய் காணாமல் போய்விடும்.

சிலர் இது கடவுள் அருளா என கேட்கிறார்கள். நாம் ஒற்றுமையாக, தூய்மையான எண்ணங்களுடன் வாழ்ந்தால், நாம் விரும்பும்வரை நம்மால் வாழ முடியும்.

இந்த அறை முழுவதும் கண்ணாடி சதுரங்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், இதனால் செய்ய முடியாத விடயம் எதுவும் இல்லை.

இந்த பிரமிடுக்குள் வைக்கப்பட்ட ஒரு கல்லை எடுத்து, சிறைச்சாலையில் போட்டேன். உடனே அங்கிருந்த கைதிகள் திருந்திவிட்டனர். சிலிகர் ஏரிக்கு அருகில் ஒரு பிரமிடைக் கட்டினேன், அந்த ஏரியின் நீர் சுத்தமாகிவிட்டது’ என பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அலெக்சாண்டர், ஓசோன் ஓட்டையை அவுஸ்திரேலியாவில் இருந்து சரி செய்ய முடியும் எனக் கூறி, அங்கு பிரமிடைக் கட்ட அனுமதி கோரியுள்ளார்.

ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாஸ்கோவை கடும்புயல் ஒன்று தாக்கியதில், அங்கு இருந்த பிரமிடுகளின் பல பாகங்கள் சிதைந்துவிட்டன.

இதனால், அலெக்சாண்டாரின் பிரமிடு மீது சந்தேக கேள்வி எழுந்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்