விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை.. வேதனையுடன் கூறிய இஸ்ரோ சிவன்!

Report Print Kabilan in விஞ்ஞானம்

சந்திரயான்-2 விக்ரம் லேண்டருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர், கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் அதிருப்தியடைந்தனர். குறிப்பாக, இஸ்ரோவின் தலைவரான சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அதனைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் இறங்கினர்.

அவர்களுடன் கைகோர்த்த நாசா விண்வெளி மையம், ஹலோ விக்ரம் என்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால், நாசாவின் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை என்றும், சமிக்ஞை மூலமாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் நாசா தெரிவித்தது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும், ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆர்பிட்டரில் உள்ள 8 தொழில்நுட்ப சாதனங்களும் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.

ஆகவே, சந்திரயான்-2 ஆர்பிட்டர் திட்டமிட்டபடி அதன் ஆய்வுகளை மேற்கொள்ளும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்திற்கு நாங்கள் தற்போது முன்னுரிமை கொடுக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்