ஆக்ரோஷமாக எழுந்து உலகையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 12 வது நினைவு தினம் இன்று..!

Report Print Aravinth in தெற்காசியா

12 வருடத்திற்கு முன்னர் கோரமுகத்துடன் எழுந்து சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் அனைத்து உயிர்களையும் உள்வாங்கிச் சென்ற சுனாமி எனும் ஆழிப்பேரலையை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் பதறுகிறது.

கடற்கரை என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு அற்புதமான இடமே. எவ்வளவு மனக் கஷ்டத்தில் இருந்தாலும் அங்கு சென்று சிறிது நேரம் நின்றிருந்தால் போதும் அனைத்து கவலைகளும் பறந்தோடிவிடும்.

அப்படிப்பட்ட கடற்கரையும் ஆபத்து நிறைந்தது என்பதை நமக்கு உணர்த்திய தினம் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 தான்.

ஆம், அன்று காலை சாதாரணமாகத்தான் விடியல் ஏற்பட்டது. ஆனால் மிகுந்த கவலையுடன் அன்றைய தினம் கழியும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு பகுதியில், கடலுக்கு அடியில் உருவான பயங்கர நிலநடுக்கத்தின் விளைவால், பிலிஃப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் சுனாமி என்ற இயற்கை சீற்றத்திற்கு ஆளாயின.

அதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை விஸ்வரூபம் எடுத்து, பயங்கர வேகத்துடன் கடலோர நகரம், கிராமம் என்று வித்தியாசம் பாராமல் உள்ளே புகுந்தது.

கடற்கரையில் இருந்த கடலோர மக்கள் மட்டுமின்றி, பொழுது போக்கிற்காக கூடியிருந்தவர்களும், நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் நடைபயிற்சி மேற்கொண்டவர்களையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வாறி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டாள் அந்த கடல்மாதா.

குவியல் குவியலாக கிடந்த பிணங்கள் ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அன்று கேட்ட மரண ஓலம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் கடற்கரையோர கிராமங்களில் இன்னும் ஒலித்துக் கொண்டு அனைவரையும் மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது.

எத்தனையோ ஆசைகளுடன் அன்று கரைந்து போனவர்களின், மிச்ச மீதி குடும்பங்களின் இன்றைய நிலை தான் என்ன?. சேதமடைந்த இடங்கள் கூட, சுனாமி ஏற்படுத்திய சுவடு தெரியாமல் மீண்டும் உயிர்பெற்றுவிட்டன.

ஆனால், உயிர்களை பலிக்கொடுத்த மக்கள் உள்ளங்களில் ரணமாக இருக்கும் காயம் மட்டும் இன்னும் ஆறாமல் அப்படியேத்தான் இருக்கிறது. அதற்கான மருந்து காலத்திடம் தான் உள்ளது.

காலம் கடந்து போக... போக... இந்த காயமும் ஆறட்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். இனியும் இதுபோல் இயற்கை பேரிடர் ஒன்றும் ஏற்பட வேண்டாம் என்றும் ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.

இந்நிலையில், சுனாமி எனும் ஆழிப்பேரலையில் பெற்றோரை இழந்த சிறுவன் ஒருவன், கண்ணீருடன் வடித்த கவிதை ஒன்றை படித்தது நினைவுக்கு வந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

உன்னை எவ்வளவு அழகாய்
ரசித்து வந்தோம்...
ஆனால் அந்த நினைவுகள் சிறிதும் இல்லாமல்
எங்களை சீரழித்து விட்டாயே...
அமைதியாக தானே இருந்தாய்
பிறகு ஏன் இவ்வளவு ஆக்ரோஷம்..
உன் அவசரத்தினால் என் குடும்பங்கள் அனைத்தையும் நான் இழந்து விட்டேனே...
தற்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன்...
இனி எத்தனை முறை காலை வருடி மன்னிப்பு கேட்டாலும்
உன்னை மன்னிக்கமாட்டேன்.....

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments