மாயமான 5 மாதங்களுக்குப் பின் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாணவி: வெளியான பதறவைக்கும் பின்னணி

Report Print Arbin Arbin in தெற்காசியா

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் மாயமான மாணவிக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது பதினைந்து வயது நிரம்பிய மகள் ஆர்கே புரம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பாடசாலை சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் கீச்சளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் ஏரியின் ஓடை அருகே பள்ளி சீருடையுடன் ஒரு மண்டை ஓடு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உள்ளிட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மாணவியின் மண்டை ஓடு அது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து திருத்தணி பகுதி உயர் பொலிஸ் அதிகாரி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது மாணவியின் முறை மாமனான சங்கரய்யா மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தது தெரிய வந்தது.

சங்கரய்யாவை பிடித்து பொலிசார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி பாடசாலைக்கு புறப்பட்ட மாணவி, கீச்சளம் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரது வீட்டிற்கு பால் ஊற்றுவதற்காக மாந்தோப்பு வழியே சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த சங்கரையா மாணவியை மிரட்டி தோப்பில் இருந்த வீட்டிற்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கே மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கு வந்த தோப்பு உரிமையாளரான 50 வயது நாதமுனி மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பார்த்துள்ளனர். சங்கரையாவிற்கு பணத்தாசை காட்டி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

பின்னர் 5 நாட்களாக அந்த மாணவியை அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் தனது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரையும் வரவழைத்து மாணவியை சிதைத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இவர்களிடம் சிக்கி பலத்த காயம் அடைந்த அந்த மாணவி பரிதாபமாக பலியானார். இதையடுத்து அவரது சடலத்தை மாந்தோப்பில் புதைத்துள்ளனர்.

பின்னர் இரு தினங்கள் கழித்து மாணவியின் சடலத்தை எடுத்து வெங்கடபுரம் கால்வாயில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

ஓடையில் தண்ணீர் வேகமாக ஓடியதால் மண்ணரிப்பு ஏற்பட்டு மெல்ல மெல்ல மாணவியின் உருக்குலைந்த சடலம் எலும்புக்கூடாக மேலே வந்துள்ளது.

அதன்பிறகே காவல் துறையின் விசாரணையில் அது மாணவியின் எலும்புக் கூடு என்பதும் தெரிய வந்தது.

தற்போது சங்கரய்யா, நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 நாட்கள் சிறைவைக்கப்பட்டு மனித மிருகங்களால் சிதைக்கப்பட்ட அந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்