பாகிஸ்தானில் இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம்! அதிரடி நடவடிக்கை எடுத்த இம்ரான் கான்

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், பழைய கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, ரவீனா(13) மற்றும் ரீனா(15) ஆகிய இரண்டு இந்து சிறுமிகளை அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் கடத்திச் சென்றனர்.

அதன் பின்னர், குறித்த சிறுமிகளை இஸ்லாமிய மதத்தலைவர் ஒருவர் கட்டாய மதமாற்றம் செய்து, இரு நபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதுடன், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குறித்த சிறுமிகளையும் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சிந்து மாகாண அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers