இந்தியா மீண்டும் எங்கள் மீது தாக்குதல் நடத்தும்: பாகிஸ்தான் பகீர் குற்றச்சாட்டு

Report Print Kabilan in தெற்காசியா

இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று நம்பகமான உளவு தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், இந்திய துணை ராணுவப்படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இச்சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள் அந்நாட்டிற்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தன. அதனைத் தொடர்ந்து இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

அப்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் பின்னர் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை உருவாக்கின.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்முத் குரேஷி, இந்தியா தங்கள் நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் வகுத்துள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. தாக்குதலுக்கான ஏற்பாடுகளை இந்தியா செய்து வருகிறது. இந்த தகவலின்படி, ஏப்ரல் 16ஆம் திகதியில் இருந்து 20ஆம் திகதிக்குள் தாக்குதல் நடக்கலாம்.

ஏற்கனவே நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தவும், பாகிஸ்தான் மீது தூதரக ரீதியான நிர்பந்தத்தை ஏற்படுத்தவும் இந்த தாக்குதலில் இந்தியா ஈடுபட உள்ளது. இதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களிடம் ஏற்கனவே முறையிட்டு விட்டோம். பாகிஸ்தானின் கவலையையும் தெரிவித்துள்ளோம்.

சர்வதேச நாடுகள், இந்தியாவின் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையை கவனத்தில் கொண்டு, அந்நாட்டை கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்த பிராந்தியத்தில் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers