நான் இறந்துவிட்டால்... இறுதிச்சடங்கிற்காக தந்தை வைத்த உருக்கமான கோரிக்கை

Report Print Santhan in தெற்காசியா
186Shares

தமிழகத்தில் உயிரோடு இருக்கும் போது தன்னை கவனிக்காத மகன் மற்றும் மகள் தான் இறந்த பிறகு எனக்கு இறுதிச்சடங்கு செய்யக் கூடாது என்று 90 வயது முதியவர் ஒருவர் மனு கொடுத்தது அங்கிருந்தவர்கள் பலரையும் வேதனையடைய வைத்துள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடியை சேர்ந்தவர் செல்லமுத்து. 90 வயதான இவர் தன்னுடைய முதுமை காரணமாக நடக்க, உட்கார கூட முடியாமல் படுக்கை படுக்கையாகவே வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். செல்லமுத்துவை அவரது கடைசி மகள் கீதா என்பவர் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நேற்று ராமநாதபுரம் எஸ்.பி.அலுவலகத்திற்கு கார் ஒன்றில் வந்த செல்ல முத்து மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், எனது சொத்துக்களை மகள்கள், மகனுக்கு பிரித்துக் கொடுத்து விட்டேன். மகள்கள், மகனுக்கு திருமணமாகி விட்டது.

இதில்மூத்த மகள், மகன் இருவரும் என்னையும் எனது மனைவியையும் பராமரிக்க முன்வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக என் மனைவி உடல்நிலை சரியில்லாத போது பார்க்காத அவர்கள், இறந்த பின்பு இறுதிச்சடங்கு செய்வதற்காக இருவரும் பிரச்சனை செய்தனர்.

இதனால் என்னை தற்போது கவனித்து வரும் மகள் கீதா என்னுடைய மரணத்திற்கு பிறகு அவரது வீட்டில் எனது உடலை வைத்து இறுதி சடங்கை செய்ய வேண்டும் என உயில் எழுதியுள்ளேன்.

அதை செயல்படுத்த வேண்டும், உயிரோடு இருக்கும்போது என்னை பார்க்கவோ, பராமரிக்கவோ வராத மூத்த மகள், மகன் ஆகியோர், எனக்கு இறுதி சடங்குகளை செய்யக்கூடாது. எனது கடைசி மகளே இறுதிச்சடங்கை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

முதியவரின் இந்த நிலையை அறிந்த அங்கிருந்தவர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்