பிள்ளைகளுக்கு திருமணம்... ஏழைகளுக்கு? வெளிநாட்டில் சம்பாதித்த தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in தெற்காசியா

ஏழைகளுக்கு உதவ நினைத்த பணக்காரர் தனது பிள்ளைகளின் திருமணத்தில் செய்த நெகிழ்ச்சி சம்பவம் பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

விழாவுக்கு வருபவர்களுக்குத் தாம்பூலப் பை கொடுத்து அனுப்புவது பொதுவான வழக்கம். வசதி படைத்தவர்கள் கொஞ்சம் காஸ்ட்லியான பொருட்களை அன்புப் பரிசாக அளிப்பதுண்டு.

ஆனால், தனது பிள்ளைகளின் திருமணத்தை ஒட்டி, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகளை வழங்குகிறார் கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டக்கயம் கிராமத்தைச் சேர்ந்த அஸீஸ்.

இதுகுறித்து அஸீஸ் “வெளிநாட்டில் வேலை செஞ்சு, சில வருஷங்களுக்கு முன்னால ஊர் திரும்பினேன். சின்ன வயசில இருந்தே என்னால முடிஞ்ச அளவுக்கு சமூக சேவை செய்யணும்னு ஆசை.

சின்னச் சின்னதா உதவியிருந்தாலும், பெரிய அளவுல ஏழைகளுக்கு உதவி செய்யணும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன். எனக்கு ஒரு பையன்.

பேரு நவீத். பொண்ணு நாசியா. ரெண்டு பேருமே டாக்டர்ஸ். ரெண்டு பேருக்கும் வரன்கள் பார்த்து, ஒரே மாசத்துல தனித் தனி தேதியில கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு ப்ளான் பண்ணினேன்.

எல்லாம் சரியா அமைஞ்சுட்டதால பசங்க கல்யாணத்த வெச்சு மனசுக்கு நிறைவா ஒரு காரியம் செஞ்சா என்னன்னு தோணுச்சு.

முதல்ல, ஏழைப் பொண்ணுங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னனு நினைச்சேன். ஆனா, அதைவிட ஏழைகளுக்கு இலவச மனை கொடுத்தால் அவங்க வாழ்க்கையே நல்லபடியா அமையுமேன்னு என் மனைவியும் பிள்ளைகளும் சொன்னாங்க. இதைவிட நல்ல யோசனை இருக்க முடியாதுன்னு உடனடியா காரியத்துல இறங்கிட்டேன்” என்கிறார் அஸீஸ்.


முஸ்லிம் லீக் கட்சியின் கோட்டயம் மாவட்டத் தலைவராக இருக்கும் அஸீஸ், முதற்கட்டமாக முண்டக்கயம் பஞ்சாயத்தில் உள்ள மூன்று சிறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

தனது வாரிசுகளின் திருமண நிகழ்வை ஒட்டி, நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்கப்படும் என்றும், தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். விண்ணப்பங்கள் வந்ததும் உடனடியாகச் செயலில் இறங்கினார்.

மொத்தம் 120 விண்ணப்பங்கள் வந்துச்சு. மூணு சின்ன கிராமங்கள்ல இவ்ளோ பேரு சொந்த மனை இல்லாம கஷ்டப்படுறாங்களேன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

விண்ணப்பங்களைப் பல கட்ட ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதுல உண்மையாகவே கால் சென்ட் இடம்கூட இல்லாம கஷ்டஜீவனம் நடத்துற ஏழைகள் 35 பேரைத் தேர்ந்தெடுத்தோம்.

அதுல எல்லா மதங்களைச் சேர்ந்தவங்களும் இருக்கணும்ங்கிறதுல உறுதியா இருந்தோம். நமக்கெல்லாம் இஷ்டப்பட்ட தெய்வம் இருக்கும். அது அவங்கவங்க மனசு சார்ந்தது.

ஆனா, வறுமைக்கு மட்டும் சாதியும் கிடையாது. மதமும் கிடையாது. இப்போ இலவச மனை வாங்குறவங்கள்ல பாதிக்கும் மேல இந்துக்கள், கிறிஸ்தவர்கள். ஒவ்வொருத்தருக்கும் தலா நாலு சென்ட் நிலம் கொடுக்கிறேன்.

அவங்களே அவங்களுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்துட்டாங்க. பிள்ளைங்களோட கல்யாண வேலையெல்லாம்கூட அப்புறம்தான். 35 பேருக்கும் அவங்க பேர்ல நிலத்தை பதிவு பண்ணிக் குடுக்கிற வேலைதான் இப்ப வேகமா ஓடிட்டு இருக்கு” என்று உற்சாகமாகிறார் அஸீஸ்.

மூவாற்றுப்புழா - பூந்தாறு நெடுஞ்சாலையில் இருக்கிறது கூட்டிக்கல். இந்தப் பகுதியில் உள்ள நிலத்தைத்தான் ஏழைகளுக்கு இலவசமாக வழங்குகிறார் அஸீஸ். இன்றைய தேதிக்கு, இங்கு ஒரு சென்ட் 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை விலைபோகிறது. இதற்கு முன்பு இதேபோல் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டன்மேட்டில் அங்கன்வாடி மையம் அமைக்கவும் தனது சொந்த இடத்தை அரசுக்குக் கொடுத்தார் அஸீஸ். தமிழக தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளே அந்த அங்கன்வாடியில் அதிகமானோர் படிக்கின்றனர்.

அஸீஸின் சமூகப் பணிகளுக்கு அவரது மனைவி சுனிதாவும் இரு பிள்ளைகளும் தோள் கொடுத்து ஊக்குவிப்பதை ஊரே அதிசயமாய் பார்க்கிறது. இலவச மனை பெறும் குடும்பங்களோ அஸீஸின் குடும்பத்தை மனதார வாழ்த்துகின்றன.

“என் பிள்ளைங்க கல்யாணத்தப்போ, ஏழைக் குடும்பங்கள் சிரிச்ச முகத்தோட ஆசிர்வதிக்கிறதைவிட எங்களுக்குப் பெரிய சந்தோஷம் இருக்க முடியாது. என்னோட இந்தச் சமூக சேவையை என் பசங்களும் தொடர்ந்து செய்வாங்க” என்று புன்னகையுடன் விடைதருகிறார் அஸீஸ்.

செப்டம்பரில் நடைபெறவிருக்கும் அவரது பிள்ளைகளின் திருமணத்துக்கு காமதேனு சார்பில் அட்வான்ஸ் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

- Thehindu

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்