சித்திரவதை தாங்க முடியவில்லை... சுட்டே கொன்று விடுங்கள்: இந்திய ராணுவத்தின் வன்முறையால் கதறும் காஷ்மீர்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்திய மாநிலமான காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு நீக்கிய பின்னர் அங்கு தாக்குதல் மற்றும் சித்ரவதை போன்றவற்றை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரும்பான்மை இஸ்லாமிய சமூகத்தை கொண்ட காஷ்மீரில், பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள படையினர், அங்குள்ள அப்பாவி மக்களை லத்திகள் மற்றும் கம்பிகளால் தாக்குவதாகவும்,

மின்சார அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி அங்குள்ள மக்கள் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஊடக பிரதிநிதிகளிடம் கூறி கதறியுள்ளனர்.

பலரும் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கி, தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை வெளிப்படையாக காட்டியது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

காஷ்மீரின் தெற்கு பகுதியில் சுமார் 6 மாவட்டங்களில் மட்டும் ராணுவத்தின் அத்துமீறல் எல்லை மீறியுள்ளதாகவும், பிரம்படி மற்றும் சித்திரவதைக்கு தாங்கள் உள்ளாவதாகவும் சர்வதேச ஊடக பிரதிநிதிகளிடம், அங்குள்ள மக்கள் புகார் அளித்துள்ளனர்.

தமது பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒருவர் வெளியிட்ட தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், என் உடலின் அத்தனை பாகங்களிலும் அவர்கள் அடித்தார்கள். எங்களை உதைத்தார்கள். லத்தியால் அடித்தார்கள்.

மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். கேபிள்களால் எங்களை தாக்கினார்கள். எங்கள் பின்னங்கால்களில் அடித்தார்கள்.

நாங்கள் மயங்கி விழுந்தபோது, எங்களுக்கு மீண்டும் மின்சார அதிர்ச்சி கொடுத்து சுயநினைவுக்கு கொண்டு வந்தார்கள்.

அவர்கள் எங்களை லத்தியால் அடித்தபோது நாங்கள் கதறினோம். எங்கள் வாயில் மண்ணை அடைத்து மூடினார்கள் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆடைகளை களைந்து, கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் லத்தியாலும், கம்பிகளாலும், சுமார் இரண்டு மணி நேரம் அடித்தார்கள். நான் மயங்கி விழுந்த போதெல்லாம், மின்சார அதிர்ச்சி கொடுத்து என்னை எழுப்பினார்கள் என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதை விட காஷ்மீர் மக்களை இந்திய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கலாம் என அவர் கதறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்