இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஐந்து பேர் கொண்ட மொத்த குடும்பம் வீடு இல்லாததால் கழிப்பறைக்குள் வசித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் சுபர்னப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்னாப்பாலி கிராமத்தை சேர்ந்தவர் ரசானந்த் பதன். இவர் மனைவி ஜெயந்தி. தம்பதிக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
சிறிய வீட்டில் இந்த குடும்பம் வசித்து வந்த நிலையில் அந்த வீடு மழையில் இடிந்து வீழ்ந்துள்ளது.
கூலி வேலை செய்யும் பதனால் வீட்டை சீரமைக்கமுடியவில்லை.
இதனால் குடும்பத்துடன் எங்கு தங்குவது என தெரியாமல் தவித்த அவர் அரசாங்க கழிப்பறையில் சில காலமாக தங்கியுள்ளார்.
இது குறித்து ஜெயந்தி கூறுகையில், வீடு கட்டுவதற்கு, எங்கள் ஊர் பஞ்சாயத்தின் மூலம் அரசாங்கத்தை தொடர்பு கொள்ள பல தடவை முயன்றும் யாரும் எங்களுக்கு உதவவில்லை.
கழிப்பறைக்குள் தான் நாங்கள் தங்கியுள்ளோம், கழிவறை குழியை பிளாஸ்டிக் பையால் மூடிவிட்டு அருகில் உள்ள தரையை சுத்தம் செய்து அங்கே வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் தான் கவலையாக உள்ளது என கூறியுள்ளார்.
இதனிடையில் பதன் குடும்பத்தார் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில், உடனடியாக மாவட்ட நிர்வாகம் பதன் குடும்பத்தாருக்கு அரசாங்கம் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.