காதல் திருமணம்... ஒற்றை மகளுக்காக ஆண் வேடமிடும் இளம் தாயார்: நெகிழ வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

காதலித்து திருமணம் செய்து கொண்டவர் கரிப்பிணியாக கைவிட்ட நிலையில், இளம் தாயார் ஒருவர் தமது மகளுக்காக நாள் தோறும் ஆண் வேடமிட்டு வருகிறார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் பரபரப்பான தெரு ஒன்றில் ஆண் வேடத்தில் கடை ஒன்றை நடத்தி வருகிறார் 41 வயதான ஃபர்ஹீன் இஷ்தியாக்.

காதலித்து கரம்பிடித்த கணவர் கைவிட்ட நிலையில், தமது 9 வயது மகளின் எதிர்காலம் கருதி, இஸ்தியாக் ஆண் வேடமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கராச்சி நகரை சேர்ந்தவர் தற்போது 41 வயதாகும் ஃபர்ஹீன் இஷ்தியாக். கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வேறு பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து கரம்பிடித்துள்ளார்.

கூடிய விரைவிலேயே இஷ்தியாக் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கர்ப்பிணியான இஸ்தியாக்கை விட்டு, அந்த நபர் திடீரென்று ஒரு நாள் மாயமாகியுள்ளார்.

இந்த சம்பவங்களால் மொத்தமாக உடைந்து போன இஷ்தியாக் அரசு மருத்துவமனை ஒன்றில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அறுவைசிகிச்சை மூலம் பிள்ளை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, தாம் இறந்தால் தமது பிள்ளையை தனது பெற்றோரிடம் ஒப்படைக்கவே மருத்துவர்களிடம் தெரிவித்ததாக கூறும் இஷ்தியாக்,

இந்த காலகட்டங்களில் எப்போதும், தமது குடும்பத்தாரால் எந்த உதவியும் தமக்கு கிடைக்கவில்லை என்றார்.

குழந்தை ஸஹ்ரா பிறந்த பின்னர், தமது கசப்பான அனுபவங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மகளுக்காக வாழ முடிவு செய்துள்ளார் இஷ்தியாக்.

இதனையடுத்து தமது பெற்றோரை நாடிய அவர், தம்மை மகளாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், ஆனால் உங்கள் பேரக்குழந்தையை கைவிட்டு விட வேண்டாம் என வாதிட்டுள்ளார்.

இஷ்தியாக்கின் நிலை கண்டு பரிதாபமடைந்த அவர்கள் ஸஹ்ராவுக்கு நான்கு வயதாகும் வரை கவனித்துக் கொண்டுள்ளனர்.

இந்த நேரத்தில், இஷ்தியாக் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் தனது மகளுடன் தங்க நிரந்தர தீர்வையும் திட்டமிட்டார்.

இதனையடுத்து லாகூர் நகரில் பரபரப்பான அனார்கலி பஜாரில் கடை ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளார்.

ஆனால் பெண் ஒருவரால் அந்த பஜாரில் தனித்து இயங்க முடியாது என்ற சூழல் உருவானதாக கூறும் இஷ்தியாக்,

இறுதியில் ஆண் வேடமிட்டு அங்குள்ள ஆண்களை சமாளிக்க முடிவு செய்துள்ளார். பஜாரில் தமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே தாம் பெண் என அடையாளம் தெரியும் என கூறும் இஷ்தியாக், பொதுவாக வேறு எவரும் தம்மை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்கிறார்.

தொடர்ந்து படிப்படியாக நிதி திரட்டிய இஷ்தியாக் தற்போது அனார்கலி பஜாரில் சொந்தமாக கடை ஒன்றை திறந்துள்ளார்.

மட்டுமின்றி தமக்கிருக்கும் கடன்களை சமாளிக்க காலை வேளைகளில் பெண்களுக்கான சாரதியாகவும் இஷ்தியாக் செயல்பட்டு வருகிறார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்