மதத்தை அறிய ஆடையை கழட்ட சொன்ன கும்பல்! 18ஆக உயர்ந்த உயிர்பலி எண்ணிக்கை.. பற்றி எரியும் டெல்லி

Report Print Raju Raju in தெற்காசியா

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ள நிலையில் கலவரத்தில் உயிர்பிழைத்த பத்திரிக்கையாளர் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது நிறைவேறவில்லை.

இந்த நிலையில் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளிலும் சிஏஏவு-க்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் இரு சமூகங்களிடையேயான மோதலாக இது மாறியது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பல பத்திரிகையாளர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்களிடம் நீ இந்துவா? முஸ்லிமா? என கேட்டும் தாக்கியுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அர்விந்த் குணசேகர் என்ற தமிழகத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், மாஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வன்முறை நடக்கும் இடத்திற்குச் செல்லும் திகிலூட்டும் அனுபவம் தொடங்கியது. ஒருவர் திடீரென்று என் நெற்றியில் பொட்டு வைத்துவிடுவதாக கூறி என்னை நெருங்கினார்.

அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் மூலம் என்னை இந்துவா முஸ்லிமா என அடையாளம் காண முயற்சிக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டேன்.

அப்போது நான், நான் பத்திரிகை புகைப்படக்காரன். என்னை எனது பணியைச் செய்யவிடுங்கள் என்றேன்

அப்போது மற்றொருவர், நீங்கள் இந்து என்றால் அங்கு ஏன் செல்கிறீர்கள்? டெல்லியில் உள்ள இந்துக்கள் இன்றுதான் விழித்துக் கொண்டுள்ளார்கள். என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை மட்டும் பாருங்கள் என்று கூறினார்.

அவர்களிடம் பேசிக்கொண்டே வேறொரு வழியாக அப்பகுதிக்குள் நுழைய முயன்றேன். அங்கிருந்த ஒரு சுவரின் அருகில் இருந்து புகைப்படம் எடுக்கத் துவங்கினேன். திடீரென்று மூங்கில் குச்சிகளையும் பெரிய இரும்பு ஆயுதங்களையும் கொண்டு என்னைச் சுற்றிவளைத்தார்கள்.

அவர்களும் முன்பு கேட்டதுப்போலவே நீங்கள் இந்துவா? முஸ்லிமா? எனக் கேட்டார்கள். நான் பதில் சொல்ல மறுக்க, பதில் சொல்லவில்லை என்றால் உனது ஆடைகளைக் கழற்றி நீங்கள் எந்த மதத்தவர் என்று உறுதி செய்வோம் என்று அச்சுறுத்தினார்கள். நான் கைகூப்பி, நான் புகைப்படக்காரன் என்று சொன்னேன்.

பின்னர் அவர்கள் என்னை மேலும் அச்சுறுத்தினார்கள். "என்னை விடுங்கள். நான் சாதாரண புகைப்படக்காரர்தான்" என்று சொன்னேன். எனது கேமராவை பறிக்க முயன்றனர். என்னை அச்சுறுத்தும் வகையில் தாக்கினார்கள்.

அப்போது அருகில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் அக்கும்பலிடம் இருந்து என்னை மீட்டார் என உயிர் தப்பிய நிமிடங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த வன்முறைகளில் படுகாயமடைந்த நிலையில் டெல்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையில் டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்