தாய்லாந்தில் தீவிரமடைந்துள்ள முடியாட்சிக்கு எதிரான போராட்டம்! காவல்துறையின் அராஜக செயல்

Report Print Karthi in தெற்காசியா

தாய்லாந்தில அமல்படுத்தப்பட்ட அவசர ஆணையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக சார்பு ஆர்வலர்களை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் முடியாட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பினை கூர்மைப்படுத்தியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களோடு பல்வேறு தரப்பினரும் கைகோர்த்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ரசாயனம் கலந்த தண்ணீரைக் கொண்டு போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.

நாடு தழுவிய மாணவர்களின் போராட்டத்தினையடுத்து பிரதமர் பிரயுத் தான் பதவி விலக போவதில்லையென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

image credit: Reuters

மேலும், அரசு போராட்டத்தினை கட்டுப்படுத்த புதிய சக்திகளை பயன்படுத்தவும் தயங்காது என்றும், அரசு அவசர ஆணையை 30 நாட்களுக்கு அமல்படுத்தியுள்ளது. இது நிலைமை சீரடையும் வரை ஆணை அமலில் இருக்கும் என கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் முதல் மாணவர்கள் தலைமையில் தொடங்கியுள்ள இந்த போராட்டமானது ஆண்டாண்டு காலமாக தாய்லாந்தினை ஆட்சி செய்து வரும் முடியாட்சி முறைக்கு எதிராகவும், சதியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு எதிராகவும் வீரியமாக செயல்பட்டு வருகின்றது.

முன்னதாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு மன்னர் வஜிரலோங்க்கார்ன், நாட்டையும், முடியாட்சியையும் விரும்புபவர்களை மட்டுமே நாடு வேண்டுகிறது என்று கூறியிருந்தது போராட்டத்தினை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை ராணி சுதிதா மற்றும் இளவரசர் தீபாங்கோர்ன் ராஸ்மிஜோதி ஆகியோர் பயணித்த வழியில் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை விரல்கள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காவல்துறையினர் இதில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தாய்லாந்து சட்டப்படி இந்த குற்றத்திற்கு 16 ஆண்டுகள் வரை கடுங்காவல் விதிக்கப்படும். இந்த சம்பவம் போராட்டக்காரர்களின் கோபத்தினை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்