தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி மாணவர் சாதனை!

Report Print Samy in சிறப்பு

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியை 11மணி 55 நிமிடத்தில் நீந்தி, சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் நேற்று சனிக்கிழமை சாதனை படைத்தார்.

அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை முடிச்சூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் ராஜேஷ்வரபிரபு (20). தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் இவர், சிறு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்த நிலையில், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி சாதனை படைக்க எண்ணினார்.

இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் வந்து 20 கடல் மைல் தொலைவை நீந்தி கடக்க மத்திய, மாநில அரசுகளிடமும், இலங்கை அரசிடமும் அனுமதி பெற்று படகு மூலம் தலைமன்னாருக்கு சென்றார்.

அவருடன் பாதுகாப்புக்காக மீனவர்கள், படகு இயந்திர பழுது நீக்குபவர் மற்றும் பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோர் உள்ளிட்ட 10 }க்கும் மேற்பட்டோர் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் தேவையான உணவு மற்றும் உபகரணங்களுடன் ஒரு குழுவாக சென்றனர்.

இதைத்தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தலைமன்னாரில் இருந்து கடலில் இராஜேஷ்வர பிரபு நீந்தத் தொடங்கினார். அவருக்கு சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு அளித்தனர்.

பின்னர் தொடர்ந்து 11 மணி 55 நிமிடங்கள் கடலில் நீந்தி பிற்பகல் 2.55 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனையை வந்தடைந்தார்.

அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து நீச்சல் வீரர் ராஜேஷ்வர பிரபு கூறும் போது, "தலைமன்னாரில் இருந்து அதிகாலை 3 மணிக்கு நீந்தத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே கடல் வேகத்துடன் காணப்பட்டது. இதனால் எனக்கு சிரமமாக இருந்தது.

இருந்தாலும் கடலில் தொடர்ந்து நீந்தினேன். பின்னர் கரைக்கு வரும் போது நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இங்கும் எனக்கு சிரமம் ஏற்பட்டது.

நீந்தும் போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்பட்டன. அவற்றை கடந்து நீந்தி வந்தேன் என்றார் அவர்.

- Dina Mani

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers