'திறமைக்குதான் முதல் இடம்..!' 21 வயது டான்ஸர் கடந்து வந்த பாதை

Report Print Aravinth in சிறப்பு

அப்பா, அம்மா இருவரும் சேர்ந்து பிள்ளைகளை வளர்க்கும்போதே பொருளாதார மற்றும் இதர பிரச்னைகளால் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் சிரமப்பட வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், தனியா இருந்து இரண்டு பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார் அந்த தாய்.

21 வயதில் நடனத்தில் அத்தனை படிகளை கற்றுத் தேர்ந்து இன்று பல சினிமா நடிகர், நடிகைகளுக்கும் கற்றுத் தந்து கொண்டிருக்கும் ஜனனி சடகோபனிடம் பேசினோம்,

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். கோவையில், ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே டான்ஸ் கிளாசில் சேர்ந்தேன். அதற்குப் பிறகு எனக்கான வாய்ப்புக்காக ஆறாம் வகுப்பு சென்னையில் படித்தேன்.

அக்காதான் எனக்கு எல்லா விஷயத்திலும் முன் உதாரணம். ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டேன். அங்கே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அடுத்து இனி ரியாலிட்டி ஷோக்களுக்கு செல்லக் கூடாது என முடிவு செய்து என்னுடைய படிப்பில் முழுவதுமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ன்னுடைய அக்கா ஃபுட் பால் பிளேயர், கராத்தே பிளாக் பெல்ட், மாடல் என பல திறமைகளை கொண்டவர். ஒரு முறை அக்காவுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போதுதான் நடனத்தின் மீது ஈர்ப்பு அதிகமானது'' என்றவர்,

'போடா போடி' படத்தில் மோஜோவாக நடித்திருந்த ஜெப்ரிவார்டன் அவர்களிடம் நான்கு வருஷம் இருந்து நடன வகைகளில் நிறைய கற்றுக் கொண்டேன். சல்சா, சாச்சா, ரூம்பா என டாங்கோ நடனத்தில் 18 வகைகள் இருக்கிறது.

நான்கு வருடத்தில் அவரிடமிருந்து பயிற்சியின் மூலமாக இவற்றை எல்லாம் கற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு கல்லூரி படிப்பில் என்னுடைய கவனத்தை முழுவதுமாக திருப்பினேன். என்ஜினீயரிங் ECE எடுத்து படித்தேன்.

படிப்பிலும் ஆர்வம் அதிகம் என்பதால் எங்காவது டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு சென்றால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். குறிப்பாக நான் யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். நான் ஒருவரிடம் நெருங்கிப் பழக ரொம்ப நாட்கள் ஆகும். சென்னையில் உள்ள 'ராக்' அகாடமியுடன் 'சூப்பர் குடும்பம்', சன் டிவி விருதுகள், ஜெயா டிவி விருதுகள், மிர்ச்சி விருதுகள் என பல நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குநராக இருந்திருக்கிறேன்.

ராக் அகாடமி ரமாஸ் மாஸ்டரிடம் 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற குளோபல் இன்வெஸ்டர்ஸ் நிகழ்ச்சிகளை எங்கள் குழுதான் செய்தோம். இதற்காக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எங்களை அழைத்து பாராட்டினார். வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத தருணம் அது.

இதுபோல பல நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறோம். எனக்கு கற்றுத் தருவது மிகவும் பிடிக்கும். நிறைய பேருக்கு நடனம் கற்றுத் தந்திருக்கிறேன். அதில் மறக்க முடியாதவர் ஸ்ரேயா. நாங்கள் பல சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கோம். ஸ்ரேயாவுக்கு நிறைய அசைவுகளை கற்றுத் தந்திருக்கிறேன்.

இதேபோல அடுத்த மாதம் ஐந்து நாட்கள் ஆப்பிரிக்க ஹைகமிஷன் நடத்தும் நிகழ்ச்சிக்காக நடனம் ஆட ஆப்பிரிக்காவிற்கு செல்கிறேன். எனக்கும் அக்காவுக்கும் நிறையவே வித்தியாசம் வயதிலும் சரி, குணத்திலும் சரி. நான் அக்காவைவிட குள்ளமாகத்தான் இருப்பேன்.

அதனால் என்னை டான்ஸ் கிளாசில் சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள். நானோ கீழே விழுந்து, புரண்டு அடம் பிடித்து ஒரு வழியாக வகுப்பில் சேர்ந்து கொண்டேன். அப்படித்தான் டான்ஸ் கற்றுக் கொள்ளவே ஆரம்பித்தேன். அதாவது அக்காவை விட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்று விரும்பினேன்'' என்றவரின் குரல் உடைகிறது.

"இன்று ஒவ்வொருவரும் பாராட்டும் இந்த பாராட்டுக்கள் எல்லாமே என் அம்மாவைத்தான் சேரும். சிங்கிள் மதராக இருந்து இரண்டு பெண்களையும் சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து இவ்வளவு தூரம் வளர்த்திருக்கிறார். எங்களுடைய அப்பா சடகோபன் சிவில் என்ஜினீயர். அவர் வேலை நிமித்தமாக ஆப்பிரிக்காவில் இருந்தார்.

எங்களுக்குத் தேவையான உதவிகளை அங்கிருந்தே செய்து வந்தார். ஆனால், எங்களை அருகிலேயே இருந்து பார்த்து பார்த்து வளர்த்தவர் எங்களுடைய அம்மாதான். அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகிறது. என் அம்மாவுக்கு நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை. சினிமாவுல எனக்கு அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்ல.

ஆனால், டான்ஸ் என்று சொன்னால் உடனே ஓ.கே சொல்லிடுவேன். சின்ன வயதிலேயே சில குறும்படங்களில் நடிச்சிருக்கேன். அதற்காக அப்துல்கலாம் ஐயா கையால அவார்டு வாங்கியிருக்கேன். டான்ஸ் என்றாலே சரியா படிக்க மாட்டார்கள் என்கிற பார்வை இருக்கிறது. ஆனால், எனக்கு இரண்டுமே நன்றாக வரும் என்பதால் அதை பற்றி எல்லாம் கவலைப்படவே மாட்டேன். நடனம் தவிர்த்து ஓவியங்கள் வரைவது மிகவும் பிடிக்கும்.

இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டு விழுந்து கிடந்தப் போதுகூட கண் திறந்தவுடன் தேடியது என்னுடைய கால்களைத்தான். கால் நன்றாக இருந்தால் மட்டுமே போதுமானது என்பதுதான் என்னுடைய வாழ்க்கையின் ஆசை'' என்றவர் தன்னுடைய சாதனைகளை அடுக்கினார்.

நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது சாரல் என்ற அமைப்பு நடத்திய டான்ஸில் முதலாவதாக வந்த எனக்கு லதா ரஜினிகாந்த் அவார்டு கொடுத்தாங்க. மனோரமா ஆச்சி அம்மா கையால இரண விருது வாங்கியிருக்கிறேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 500க்கும் மேல சான்றிதழ்கள் மற்றும் அவார்டுகளை வாங்கியிருக்கேன்.

பிரிட்டீஷ் எம்பசி தேர்வு எழுதி, சில்வர் மெடல் வாங்கியிருக்கேன். ஒரு நடன வகுப்பு ஆரம்பிக்கணும். அங்கு திறமைக்குதான் முதல் இடம். அதுதான் என்னுடைய கனவு. லட்சியம் எல்லாம். இப்போ ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்க்கிறேன். வேலை பார்க்கிற இடத்துல எனக்கு நிறையவே உதவியாக இருக்கிறார்கள்.

அக்காவும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவங்க என்னை செட்டில் செய்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவில் இருக்காங்க. சிங்கிள் மதர்னு வெளியில சொல்றதுக்கு நான் வெட்கப்பட மாட்டேன். அப்பா இல்லாதப் பொண்ணுனு யாரும் சொல்லிடக் கூடாது என அம்மா பார்த்து பார்த்து வளர்க்கிறாங்க.

இதுவரைக்கும் நான் பஸ்ல போனதே இல்லை. ஆட்டோ, கார்னு தான் கூட்டிட்டுப் போவாங்க. அம்மா புஷ்பா ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், படங்களுக்கு ஆர்ட்டிஸ்ட் அரேஜ் செய்வது போன்ற வேலைகளைப் பார்த்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் காஸ்டியூம் டிசைனிங்கும் செய்து கொண்டிருக்கிறார். அவர் மாதிரி ஒரு அம்மா இருந்தால் எந்த பிள்ளைகளும் கண்டிப்பாக சாதனை செய்ய முடியும். ஐ லவ் மை அம்மா'' என்று கண்கள் மிளிர சொல்லி முடிக்கிறார் ஜனனி சடகோபன்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments