கடவுள் ஏன் மனிதனாகப் பிறக்கவேண்டும்?

Report Print Balamanuvelan in ஆன்மீகம்

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார், அவரது மந்திரி ஒரு கிறிஸ்தவர். ராஜா எப்போதும் மந்திரியைக் கிண்டல் செய்துகொண்டே இருப்பார்.

ஒரு நாள் அவர் மந்திரியைப் பார்த்து “மந்திரியாரே, கடவுள் மனிதனாகப் பிறந்தார் என்று சொல்கிறீரே, அவர் ஏன் மனிதனாகப் பிறக்க வேண்டும், அவரோ சர்வ வல்லமையுள்ளவர் என்று சொல்கிறீர், அப்படியானால் அவர் மேலே இருந்தபடியே மனித குலம் மீட்கப்படட்டும் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதுமே, எதற்காக விண்ணுலகை விட்டு மண்ணுலகுக்கு வர வேண்டும் என்று நக்கலாக ஒரு கேள்வி கேட்டார்.

மந்திரி பொறுமையாகச் சொன்னார். ”மன்னா, எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள், நாளை உங்களுக்கு இந்தக் கேள்விக்கான பதிலைத் தருகிறேன்”.

மறுநாள் மன்னரும் மந்திரியும் வழக்கமானத் தங்கள் படகு சவாரிக்குச் சென்றனர். மன்னர் சென்றால் கூட பாதுகாவலர்கள் வரமாட்டார்களா? தளபதியும் பல போர் வீரர்களும் இன்னொரு படகில் வந்தார்கள். அப்போது மற்றொரு படகு எதிரே வந்தது. அதில் ஒரு படை வீரன் ஒரு சிறு பையனைக் கையில் வைத்திருந்தான். அது யார் என்று மன்னர் உற்றுப்பார்த்தார்.

அந்தச் சிறுவனைப் பார்த்தால் மன்னரின் செல்ல மகன், இளவரசனைப் போல் இருந்தது. அந்தப் படகு மன்னரின் படகுக்கு அருகில் வரவும், அந்த வீரன் சிறுவனைத் தூக்கித் தண்ணீரில் போட்டு விட்டான்.

அவ்வளவுதான் மன்னர் தொபீர் என தண்ணீரில் குதித்துவிட்டார். மன்னரையும் சிறுவனையும் தண்ணீரில் இருந்து தூக்கிய வீரர்கள் சிறுவனை மன்னரிடம் கொண்டு வந்தார்கள். பார்த்தால் அது ஒரு பொம்மை, இளவரசனைப் போலவே செய்யப்பட்டிருந்த ஒரு பொம்மை. மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

மந்திரியைப் பார்த்தார். மந்திரி மன்னரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார் “மன்னா, உங்கள் மந்திரி நான் பக்கத்திலேயே நிற்கிறேன், தளபதி நிற்கிறார், 100 படைவீரர்கள் நிற்கிறார்கள், இத்தனை பேர் இருக்கும்போது இளவரசனைக் காப்பாற்ற நீங்கள் ஏன் தண்ணீருக்குள் குதித்தீர்கள்?

மன்னர் ஒரே வார்த்தை சொன்னார், “அன்பு” மந்திரி உடனே சொன்னார், மன்னா, நீங்கள் நேற்று ஒரு கேள்வி கேட்டீர்களே,

அதற்கான பதிலும் இதுதான், “அன்பு”. தன் பிள்ளைகள் பாவம் என்னும் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்க்கப் பொறுக்காமல்தான் அவரும் உலகத்திற்கு இறங்கி வந்தார்”. மன்னருக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. உங்களுக்கு?

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers