தீபம் ஏற்றி இறைவனை ஏன் வழிபாடு செய்கின்றோம்?

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
474Shares
474Shares
lankasrimarket.com

உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார் இறைவன்.

இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவிமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.

அவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.

தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது.

வீடுகளில் தீபத்தை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.

அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

தீபம் ஏற்றும் எண்ணெயின் பலன்கள்
  • நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கைகூடும். செல்வம் பெருகும்.
  • நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். நம்மை விட்டு எல்லா பீடைகளும் அகலும். நவகிரக தோச நிவர்த்தி தரும்.
  • எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணெய் ஏற்றது.
  • விளக்கு எண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும், குலதெய்வத்தின் முழு அருள் கிடைக்கும்.
  • தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற வசீகரம் கூடும்.
  • இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்ற சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
  • வேப்பெண்ணை தீபம் ஏற்றினால் கணவன் மனைவி உறவு நலம் பெறும். மற்றவர்களின் உதவி கிடைக்கும்.
  • வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படும். மேலும் இது குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.
  • நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மன் அருள் கிட்டும். மந்திர சக்தியையும் பெறலாம்.
தெய்வங்களுக்கு ஏற்ற தீப வழிபாடுகள்

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவது நலம் பயக்கும்

திருமகளுக்கு பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபட சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

குலதெய்வத்திற்கு வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வழிபட குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.

அம்மனுக்கு நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என ஐந்து கூட்டு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட அம்மனின் அருள் பார்வை கிட்டும்.

சிவன், முருகன், திருமால் உள்ளிட்ட ஏனைய தெய்வங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சாலச் சிறந்தது.

குறிப்பு
தீபத்தினை தானாக ஒருபோதும் அணைய விடக்கூடாது. தீபத்தினை குளிர வைக்கும் போது வாயால் ஊதவோ, கைகளால் விசிறவோ கூடாது.

பூக்களால் அல்லது கல்கண்டினால் தீபத்தின் சுடரினை குளிர வைக்கலாம். குச்சியைக் கொண்டு திரியை விளக்கினுள் இழுத்து எண்ணெயில் அமிழ்த்தி குளிர வைக்கலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு வாழ்வின் உன்னத நிலையை நாம் அடைவோம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்