காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை: உலகவங்கி அறிக்கை

Report Print Givitharan Givitharan in இலங்கை

அண்மையில் உலக வங்கி வெளியிட்டுள்ள பதிப்பொன்றில் அதிகரித்துவரும் வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சிப் பரம்பலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக தென்னாசிய நாடுகளே காலநிலை மாற்றங்களால் அதிகளவில் பாதிப்புக்களுக்குள்ளாகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாலயா பிரதேசங்கள், ஹரகோராம் மற்றும் இந்து குஸ் மலைப்குதிகளில் நிலவும் வருடாந்த சராசரி வெப்பநிலையானது உறை வெப்பநிலையிலும் குறைவாகக் காணப்படுவதுடன், பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளில் இவ் வெப்பநிலை 25 தொடக்கம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படுகிறது

இவ் அதிதாழ் மற்றும் அதியுயர் வெப்பநிலைகள் மனித வாழ்க்கைக்கு பெரும் சவாலாக அமைவதுடன், அதிகரித்துவரும் காலநிலை மாற்றங்களும் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருவது பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

அதிகரித்துவரும் சராசரி வெப்பநிலை மற்றும், பருவ மழையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக ஏற்கெனவே தென்னாசிய நாடுகளில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவருவதுடன், தற்போது தாழ்வான நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடுகளான பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு போன்றன வெள்ளப்பெருக்கு, சூறாவளிகளின் தாக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்களும் அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் டாக்கா, கராச்சி, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற கிட்டத்தட்ட 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ள பெருநகரங்களும் அடுத்த நூற்றாண்டில் வெள்ளப்பெருக்கு போன்ற பாரிய அனர்த்தங்களுக்கு ஆளாகலாம் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.

கடந்த சில தசாப்தங்களை எடுத்துக்கொண்டால் தென்னாசியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் சாராசரி வெப்நிலையானது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

இவ் வெப்பநிலை அதிகரிப்பானது பிராந்தியத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவுகளால் ஏற்பட்டுள்ளது.

இதில் மேற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் தென்மேற்கு பாகிஸ்தான் பகுதிகளில் சராசரி வெப்பநிலை அதிகரிப்பானது பாரியளவில் ஏற்பட்டுள்ளதுடன், இது 1950 தொடக்கம் 2010 ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டும் 1.0 - 3.0 டகிரி செல்சியசினால் அதிகரித்துள்ளது.

இதே காலப்பகுதியில் தென்கிழக்கு இந்தியா, மேற்கு இலங்கை, பாகிஸ்தானின் வடபகுதி மற்றும் நேபாளத்தின் கிழக்குப்பகுதிகளில் இவ் வெப்பநிலை மாற்றம் 1.0 தொடக்கம் 1.5 டிகிரி செல்சியசினால் ஏற்பட்டுள்ளது.

இம் மாற்றங்கள் வருங்காலங்களில் திடீர் பொருளாதார இடையூறுகளை தோற்றுவிப்பதுடன், நீண்டகாலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் குறையவும் காரணமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்