இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: களத்தில் இறங்கும் இன்டர்போல் குழு!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் அடுத்தடுத்து நடந்துள்ள குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவும் விதமாக, சர்வதேச பொலிஸ் குழு ஒன்றினை அனுப்பியுள்ளதாக இன்டர்போல் குழு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளால் இலங்கை நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அதேசமயம் பொதுமக்களும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் சிக்கி 290 பேர் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர். மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் என்னிக்கு 38 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்டர்போல் ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சர்வதேச பொலிஸின் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டோக், தாக்குதலுடனான சர்வதேச தொடர்புகள் குறித்து கண்டறிவதற்காக, தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அமைப்பு தொடர்பான ஆவணங்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்க குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய சர்வதேச பொலிஸ்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேவையேற்படின் டிஜிட்டல் இரசாயன பகுப்பாய்வு, உயிரியல் மற்றும் புகைப்படங்கள், காணொளி ஆய்வாளர்களையும் அனுப்பிவைக்க தயாராக இருக்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான எவ்வகையான விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக சர்வதேச பொலிஸின் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டோக் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகில் இடம்பெறும் எந்த பயங்கரவாதத் தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கும் பொறுப்பு சர்வதேச சட்ட அமுலாக்கல் பிரிவுக்கு உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்