பயங்கரவாத தாக்குதல்களால் இலங்கை இத்தனை கோடிகளை இழக்கிறதா?

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலினால் 750 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலால், 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதில் சுற்றுலாப்பயணிகளாக வந்த வெளிநாட்டைச் சேர்ந்த சிலரும் இறந்துள்ளனர். அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து நாட்டில் தற்போது வரை சந்தேகத்தின் அடிப்படையில் 80-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 30 சதவீத சுற்றுலா பயணிகள் வருகை சரிந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதத்தில் 50 சதவீத வரையில் சரிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் 1,31,84,25,00,000.00 ரூபாய்) வரை இழப்பு சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி விபுல குணதிலக தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 சதவீத பயண சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளின் வரவை மையமாக கொண்டு இயங்கி வரும் நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்கள் பெரும் அளவு இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கலாம் என கூறப்படுகிறது. இலங்கையை பொருத்தவரையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா தளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் 2009-ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டது.

இதேவேளை, 2015-ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர், இலங்கை சுற்றுலாத்துறையும், பொருளாதாரத்துறையும் வளர்ச்சி கண்டது, இந்நிலையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் பெரும் அழிவை இலங்கை சந்தித்திருக்கிறது.

சுற்றுலாத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்