பழிதீர்ப்பதற்காகவே இலங்கையில் தாக்குதல் நடத்தினோம்: ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி!

Report Print Vijay Amburore in இலங்கை

ஐந்து வருடங்களுக்கு பின்பு முதன்முறையாக ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி தோன்றும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய அரசின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு மோசூலில் உள்ள மசூதி ஒன்றில் பிரசங்கம் வைத்தார்.

சிரியா மற்றும் இராக்கின் சில பிரதேசங்களை கைப்பற்றி கலிபாவை ஏற்படுத்திய போது வீடியோவில் தோன்றிய அவர் 5 வருடங்களாக வெளியுலகுக்கு தெரியாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இலங்கை தாக்குதல் குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வீடியோவில், பாகூஸ் நகரத்தை இழந்ததற்காகவும், ஈராக் மற்றும் சிரியாவில் தங்களுடைய குழு தோற்கடிக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாகவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் பலத்த காயங்களுடன் சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவி வந்தன.

அவருடைய இருப்பிடம் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில், தலைக்கு 25 மில்லியன் டொலர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ காட்சியானது எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் தங்களுடைய கோட்டையாக இருந்த பாகூஸ் நகரத்திற்காக சில மாதங்கள் போராடியதும், அது கடந்த மாதம் இழக்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார்.

முன்னதாக இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 253 அப்பாவி பொதுமக்கள் பலியானதோடு, 500க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்