சாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ் யார்?

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் என்பவரின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தாக, பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், சாய்ந்தமருதில் பலியானவர்களில் இன்னுமொருவர் பற்றிய விவரத்தினையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரின் பெயர் ஏ.எல். முஹம்மது நியாஸ். காத்தான்குடியைச் சேர்ந்த இவர் - சிறிது காலம் பத்திரிகையாளராகக் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதில் இந்த சம்பவம் நடைபெற்ற நாளில் 6 பேர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க செய்து பலியான நிலையில், மேற்படி நியாஸ் என்பவர் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது கொல்லப்பட்டார். பின்னர், துப்பாக்கியை இறுகப் பிடித்திருந்த நிலையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், காத்தான்குடிக்குச் சென்ற பிபிசி தமிழ், சாய்ந்தமருதில் பலியான நியாஸ் தொடர்பாக தகவல்களைத் திரட்டத் தொடங்கியது.

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நியாஸ், 2017ஆம் ஆண்டு சௌதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்ததாக இதன்போது அறிய முடிந்தது.

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதிதான் வெளிநாட்டிலிருந்து நியாஸ் வீடு திரும்பியதாக, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடியிலிருந்து வெளிவந்த 'வார உரைகல்' எனும் பத்திரிகை ஒன்றின் பிரதம துணை ஆசிரியராக 2014ஆம் ஆண்டு நியாஸ் பணியாற்றினார் எனும் தகவலும் பிபிசி க்கு கிடைத்தது. இந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் சிறிது காலம் நியாஸ் செயற்பட்டுள்ளார். தற்போது அந்தப் பத்திரிகை வெளிவருவதில்லை.

காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் புவி ரஹ்மதுல்லாதான் 'வார உரைகல்' பத்திரிகையின் ஸ்தாபகர். அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் இவர் மிக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். நியாஸ் பற்றிய மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, ரஹ்மதுல்லாவை பிபிசி சந்தித்துப் பேசியது.

இதன்போது பல்வேறு தகவல்களை புவி ரஹ்மத்துல்லா நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"வார உரைகல் பத்திரிகையை என்னால் ஒரு கட்டத்தில் வெளியிட முடியாமல் போயிற்று. அப்போது பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தும் பணியை தனக்கு வழங்குமாறு என்னிடம் நியாஸ் கேட்டார். அதற்கிணங்க, அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததோடு, அந்தப் பத்திரிகைக்கான பிரதம ஆசிரியர் பொறுப்பையும் எழுத்து மூலம் அவருக்கு வழங்கினேன்.

ஆனால், இரண்டு வெளியீடுகளை மட்டுமே பிரதம ஆசியராக இருந்து அவர் கொண்டு வந்தார்" என்றார் வார உரைகல்லின் ஸ்தாபகர் புவி ரஹ்மதுல்லா.

இதன் பிறகு நியாஸுடன் தான் தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் ரஹ்மதுல்லா தெரிவித்தார்.

வார உரைகல் பத்திரிகையின் பிரதம துணை ஆசிரியராக நியாஸ் நியமிக்கப்பட்ட தகவல், அந்தப் பத்திரிகையின் 300ஆவது இதழின் முன் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நியாஸ் பற்றி தொடர்ந்து பேசிய புவி ரஹ்மதுல்லா; "ஊழல் மற்றும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நல்லதொரு பத்திரிகையாளராக அவர் இருந்தார்" என்றார்.

1982ஆம் ஆண்டு பிறந்த நியாஸ், 10 வருடங்களுக்கு முன்னர் அஸ்மியா என்பவரைத் திருணம் செய்தார். இவர்களுக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

திருமணத்தின்போது பெண் வீட்டாரிடமிருந்து, ஆண் தரப்பு சீதனம் பெறுவதற்கு எதிரான கொள்கையினைக் கொண்டவர் நியாஸ். அதனால், தனது மனைவியின் தரப்பிலிருந்து எந்தவித பொருளாதார உதவிகளையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. அவருக்கென்று சொந்த வீடொன்று இல்லாததன் காரணமாக, வாடகை வீடுகளிலேயே மனைவி பிள்ளைகளுடன் அவர் வசித்து வந்துள்ளார்.

நியாஸின் வீட்டினை காத்தான்குடியில் நாம் விசாரித்தபோது, அவருடைய மனைவியின் சகோதரியினுடைய வீட்டையே, அந்த ஊர்வாசிகள் எமக்கு அடையாளம் காட்டினார்கள்.

2017இல் நியாஸ் வெளிநாடு சென்ற பின்னர், அவரின் மனைவி அஸ்மியா தனது பிள்ளைகளுடன், இந்த வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்.

நாம் அங்கு சென்றபோது, நியாஸின் மனைவியுடைய தாயார் மற்றும் சகோதரி உள்ளிட்ட சில உறவினர்கள் இருந்தனர். நியாஸின் மனைவியை காத்தான்குடி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக, அங்கிருந்தோர் கூறினார்கள்.

அப்போது, நியாஸின் பயங்கரவாதச் செயலை அழுகையுடன் கண்டித்த அவரின் மாமியார் (மனைவியின் தாய்), போலீஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நியாஸின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் கண்ணீருடன் கூறினார்.

"22ஆம் தேதி வீட்டிலிருந்து நியாஸ் வெளியேறினார். எங்கே போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. கொழும்பில் குண்டு வெடித்துள்ளது வெளியே போக வேண்டாம் என்று, அவரின் மனைவி தடுத்தும் அவர் கேட்கவில்லை. மனைவியின் கைப்பேசியையும் அவர் எடுத்துச் சென்று விட்டார்" என்று, பிபிசியிடம் கூறினார் நியாஸின் மாமியார்.

"எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கொள்வார். அதனால் அவருடன் நான் பேசுவதைத் தவிர்த்துக் கொள்வேன்" என்கிறார்.

"சாய்ந்தமருதில் சம்பவம் நடந்த பின்னர், எங்கள் வீட்டுக்கு வந்த போலீஸார், நியாஸின் படத்தை, அவர் மனைவியிடம் காட்டினார்கள். அது தனது கணவர்தான் என்று அவர் அடையாளம் கூறினார். மீண்டும் ஒரு தடவை இங்கு வந்த போலீஸார், அவரின் மனைவியை அழைத்துச் சென்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலத்தை அடையாளம் காட்டுமாறு கேட்டதற்கிணங்க, தனது கணவரின் உடலை அவர் அடையாளம் காட்டினார்" என்று, நடந்த சம்வங்களை அவர் விவரித்தார்.

"இப்படியொரு அநியாயமான கொடூரத்தை இவர் செய்வார் என்று நாங்கள் நினைக்கவேயில்லை" என, நியாஸ் குறித்து அவரின் மாமியார் கண்ணீர் மல்கக் கூறினார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்