முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: 30ஆண்டுகால போரின் முடிவில் ஏற்பட்ட வலி...

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன.

30 ஆண்டுகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள திறந்தவெளி தரை பகுதியில் கூடாரங்களைக் கட்டி, பொதுமக்கள் தங்கியிருந்தனர்.

குறிப்பாக, வட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு கீழ், பதுங்கு குழிகளை அமைத்து, தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, பதுங்கு குழிகளை அமைப்பதற்கான மணல் மூடைகளை செய்ய, மக்கள் தங்கள் பழைய ஆடைகளை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி நிலப்பரப்பில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள், இறுதிக் கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே ஒன்று திரண்டிருந்தனர்.

நெரிசலாக காணப்பட்ட மக்களின் மீதே இறுதியாக ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் நீத்ததாக அந்த பகுதியில் யுத்தத்தை எதிர்கொண்டவர்கள் தனியார் ஊடகங்களுக்கு பின்னர் தெரிவித்திருந்தனர்.

அந்த கொடூரங்களை நினைவுபடுத்தும் வகையில் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பின் 10-வது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

இறுதி யுத்த வேளையில் தமது தாயாரை இழந்து அனாதையாக்கப்பட்ட சிறுமி ஒருவரே இந்த ஆண்டு ஈகைச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்