சென்னை பாடசாலை மாணவி... இலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளராக அஜந்தா பெரேரா என்பவர் களமிறங்குகிறார்.

உலகிலேயே முதல் பெண் பிரதமராக சிரிமாவோ பண்டாரநாயக 1960 ஆம் ஆண்டில் இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இதேபோன்று அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக குமார துங்க இலங்கையின் முதல் ஜனாதிபதியாக 1994-ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதி பதவி 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதல் பெண் வேட்பாளராக சிரிமாவோ பண்டாரநாயக போட்டியிட்டார்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமார துங்க இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெண்கள் யாரும் போட்டியிடாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், டிசம்பர் 7 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடை பெறும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா சமீபத்தில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜ பக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச,

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஜனாதிபதி வேட் பாளராக அநுர குமார திஸாநாயக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இதுவரையிலும் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா என்ற பெண்மணி, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அஜந்தா பெரேரா பாடசாலை கல்வியை சென்னை குட்ஷெப்பர்டு பாடசாலையிலும், ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவும், தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து தமிழர்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்கவும் தாம் தயாராக உள்ளதாக அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்