இலங்கை செவிலியர் பேசும் உணர்ச்சிகரமான வார்த்தைகள்! மஹேல ஜெயவர்த்தனே பகிர்ந்த வீடியோ

Report Print Santhan in இலங்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இலங்கை போராடி வரும் நிலையில், அங்கிருக்கும் செவிலியர் ஒருவர் உணர்ச்சிகரமாக பேசிய வீடியோவை, மஹேல ஜெயவர்த்தனே பகிர்ந்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸால், இலங்கையில் மட்டும் தற்போது வரை 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் பெண் செவிலியர் ஒருவர் உணர்ச்சிபூர்வமாக பேசும் வீடியோவை WHO Sri Lanka தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், உங்களின் அமைதியான தியாகம் கவனிக்கப்படாமல் போகிறது, எங்களின் இதயப்பூர்வமான நன்றி என்று குறிப்பிட்டுள்ளது.

இதை இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜெயவர்த்தனே ரீடுவிட் செய்து பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் செவிலியரின் பெயர் WTT குமாரி என்று குறிப்பிட்டுள்ளது. அதில் அவர், தற்போது இருக்கும் நிலையில் மற்ற தாய்மார்களைப் போன்று நான் என் பிள்ளைகளுடன் இருக்கவோ, அல்லது அவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போகிறது என்பதை அறிவேன்.

ஆனால் என் பிள்ளைகள் இதை ஒரு பிரச்சனையாகவே பார்ப்பதில்லை, அவர்களுக்கு என்னுடைய தொழில் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும், நான் என் வேலைக்கு சென்று என்னுடைய கடமையை ஆற்றுவதற்கு அவர்கள் ஆதரவு தருகின்றனர்.

சில மணி நேரங்களில் 18 அல்லது 24 மணி நேரம் வரை கூட வேலை இருக்கலாம், அதன் பின்பும் வீட்டில் நீண்ட நேரம் இருப்பதில்லை, நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன், சில நேரங்களில் அவர்களுக்கு அவர்களின் அம்மா தேவைப்படுகிறார்.

இருந்த போதிலும் என் குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகள் புரிந்து கொள்கின்றனர். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எங்களின் பராமரிப்பு மூலம், ஆரோக்கியமாக வீடு திரும்புவதை பார்க்கும் போது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்