இலங்கை தாதா தமிழகத்தில் இருந்த போது கள்ளத்தனமான பயன்படுத்தி வந்த பொருள்! வலை வீசி தேடி வரும் சி.பி.சி.ஐ.டி

Report Print Santhan in இலங்கை

தமிழகத்தில் கொல்லப்பட்ட இலங்கை தாதா பயன்படுத்தி வந்த துப்பாக்கியை சி.பி.சி.ஐ.டி பொலிசார் தேடி வருகின்றனர்.

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா தமிழகத்தின் கோயமுத்தூரில், பிரதீப் சிங் என்ற பெயரில், கடந்த 2018 முதல் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 4-ஆம் திகதி மர்மமான முறையில் இவர் உயிரிழந்த நிலையில், இவரின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரையும் கஸ்டடி எடுத்த சி.பி.சி.ஐ.டி. பொலிசார் ரகசிய இடத்தில் வைத்து மூன்று நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

நேற்றொடு கஸ்டடி முடிந்த நிலையில், மதியம் மூவரையும் பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து மூவரிடமும் இரண்டு மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. பொலிசார் மூவரிடமும் விசாரணை நடத்த மேலும், 10 நாட்கள் கஸ்டடி கேட்டு மனு செய்தனர்.

அதற்கு நீதிபதி மறுத்து மூவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தியானேஸ்வரனை ஈரோடு பெருந்துறையிலும், மற்ற இருவரையும் கோயமுத்தூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வக்கீல் சிவகாம சுந்தரி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கொட லொக்கா கோயமுத்தூரில் தங்கியிருந்த போது கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியது விசாரணையில் தெரிந்தது.

அத்துப்பாக்கியை கடந்த ஜூலை 5-ஆம் திகதி அங்கொட லொக்காவின் சடலத்தை மதுரைக்கு எடுத்து செல்லும் போது, அங்கிருந்த அவரது கூட்டாளியிடம் கொடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டிச் சென்ற விசாரணை நடத்தி கால அவகாசம் இல்லாததால், மேலும், 10 நாட்கள் கஸ்டடி கேட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கொட லொக்கா வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி.,யின் ஏழு தனிப்படை பொலிசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்