அனைத்துலக முருகபக்தி மாநாடு இலங்கையில்! பலரும் பங்கேற்பு

Report Print Dias Dias in அறிக்கை
93Shares
93Shares
ibctamil.com

உலகளாவிய முருக பக்தர்கள் பங்குபற்றும் நான்காவது அனைத்துலக முருக பக்தி மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் நாள் தொடக்கம் 5ஆம் நாள் வரை கொழும்பு, பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய கலை அரங்கில் நடைபெறுகிறது.

2012 வருடம் மலேசியாவில், திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் அதிபர் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் அருளாசிகளோடு துவங்கிய இம்மாநாடுகள் 2014 ஆண்டு சுவிற்சர்லாந்திலும், 2016 ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரிலும் சிறப்பாக நடைபெற்றன.

முருகபக்தி, இயல் இசை, நாடக அரங்கேற்றங்கள் மற்றும் தெய்வத் தமிழ்மொழியின்பால் அக்கறை ஆகியவற்றை வளர்ப்பதிலும் உலகளாவிய வகையில் பக்தர்களின் கருத்துப் பரிமாற்றங்களும், கலை கலாசாரப் அபிவிருத்திகளும் வழிபாடுகளில் பாராயணங்களைப் பெருக்கும் அருள்நோக்கோடு மலேசியதிருபீடம்இம்மாநாடுகளைநடத்திவருகிறது.

இம்மாநாடுகளில் சிறப்பு மலர்கள் வெளியீடு, பக்தி இலக்கிய ஆய்வுகள், இசைப்பாராயண இறுவட்டுகள் என ஏராளமான இலவச வெளியீடுகளையும், அருட்பிரசாதங்களையும் திருபீடம் வழங்கிவந்துள்ளது.

இலங்கையில் நடைபெறவிருக்கும் நான்காவது மாநாட்டில், இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, லண்டன், கனடா, மொரிஸியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து 900 பேராளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பன்னாட்டு சமய அறிஞர்கள் முருகபக்தி கட்டுரைகளை சமர்ப்பிக்கவிருக்கின்றனர். சமயச்சான்றோர்களான செந்தமிழ் ஆகமச் சதுரர் சிவத்திரு சத்தியவேல் முருகனார், பேராசிரியர் சோ.சோ. மீ.சுந்தரம், பேராசிரியர் சிவகுமார், இலங்கை கம்பன் கழக தலைவர் ஜெயராஜ், முனைவர் திருமுருகன், அவுஸ்திரேலியா டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியம் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.

தமிழகத்தின் பிரபல இசை வல்லுனர் ஹைதரபாத் சிவா அவர்கள் தமது மாணவர்களுடன் திருப்புகழ் அருள் இசைகளை வழங்குவார், பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பக்திப்பாடல்களின் எதிரொலியான பேராசிரியர் அனந்தராமன் அவர்களும் அருளிசை வழங்குவார்.

தமிழகத்தின் பிரபல இயல் இசை நாடக விற்பன்னர் திருமிகு பாலகுமார் மற்றும் திருமதி கிருத்திகாதேவி தலைமையில் 30 கலைஞர்கள் பாராம்பரிய நடனங்களையும் அரங்கேற்றுவர்.

அவுஸ்திரேலிய நாட்டின் இந்து சமய அறிஞர் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யம் அவர்கள் முருகப் பெருமானின் பெருமைகளை மாணவர்களுக்கு போதிக்கும் நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள்.

அருணகிரிநாதர் கதிர்காம கந்தன் மீது பாடியபதினான்கு திருப்புகழ்களையும் திருக்கோணமலை தலம் மீது பாடிய ஒரு திருப்புகழையும் அருட்கோணமலை (மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்) தலம் மீது பாடிய ஒரு திருப்புகழையும் ஒன்று சேர்ந்து ״கதிர்காம திருத்தலத்தின் திருப்புகழ்״ என்ற நூலை சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் மாநாட்டில் வெளியிட்டு வைக்கவிருக்கிறது.

இந்த நூல் இறுவட்டாகவும் வெளியிட்டு வைக்கப்படும். இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தினர், கந்தபுராண வசன காவியத்தையும் இன்னும் பலபக்தி இலக்கிய நூல்களையும் வெளியிடுகிறார்கள்.

தமிழகத்தின் ஓலைச்சுவடி காப்பகத்தில் இருந்து பழம்பெரும் முருகபக்தி நூல் ஒன்றையும் திருபீடம் வெளியிடுகிறது. மாநாட்டின் சிறப்பு மலர், பேராளர்களின் கட்டுரைமலர் மற்றும் ஏறத்தாளபதினாறு நூல்களும் மாநாட்டில் வெளியீடு காண்கின்றன.

இலங்கை இந்துப்பண்பாட்டு நிதியம், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை இந்துமத அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் போசகராக இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நிர்வாக ஒருங்கிணைப்பாளராக இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி (டாக்டர்) பொ.சுரேஷ், தலைவராக தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன், செயலாளராக அ. உமா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஏற்பாட்டுக்குழுவாக செயற்படுகின்றனர்.

முருகபக்தியின் ஞானவேள்வியாக நடைபெறவிருக்கும் இம் மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களுக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. பேராளர்களுக்கு இலவச உணவு வசதிகளும் ஏற்பாடும் செய்யப்படுகிறது.

மேல் விபரங்கள் அறிய விளைவோர் thirupeedam@hotmail.com என்ற மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்