ரயில் மீது ஏறிய வாலிபர்: மின்சாரம் தாக்கி பலியான பரிதாபம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயில் மீது ஏறிய வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Neuchatel மாகாணத்தில் உள்ள Cornaux ரயில் நிலையத்தில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு 9.15 மணியளவில் 17 வயதான வாலிபர் ஒருவர் தன்னுடைய நண்பர்களுடன் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த அந்த வாலிபர் திடீரென ரயிலின் கூரை மீது ஏற முயற்சி செய்துள்ளார்.

வாலிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை எச்சரித்து கீழே இறங்க வலிறுத்தியுள்ளனர்.

ஆனால், நண்பர்களின் எச்சரிக்கையை மதிக்காத வாலிபர் கூரை மீது ஏறி நின்றுள்ளார்.

அப்போது, அருகில் இருந்த மின்சார கம்பியை தீண்டியதும் அவரது உடல் தீப்பற்றி எரிந்துள்ளது. ஆடைகள் அனைத்து கருகிய நிலையில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் வாலிபரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வாலிபரின் உடல் 95 சதவிகித அளவிற்கு தீயில் எரிந்து போனதால் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

எனினும், தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன் தினம் வாலிபர் உயிரிழந்துள்ளார்.

ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் சென்ற வாலிபர் எதற்காக ரயில் மீது ஏறினார்? இதன் பின்னணி காரணம் என்ன என்பது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments