சுவிற்சர்லாந்து பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்ற பெருஞ்சிவனிரவு

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சைவநெறி ஒழுகும் தமிழர்கள் பெருவாரிய நோற்கும் பெருநோன்பு இதுவாகும், இந்நோன்பின் தோற்றம் தொடர்பில் பல பழம்பெரும் கதைகள் உண்டு.

ஒரு காலத்தில் உலகப் பேரழிவின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை.

இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது திருச்சீலம் செய்தாள்.

அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.

அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் 'பெருஞ்சிவனிரவு (சிவராத்திரி)" என்று பெயர் பெறவேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று முழுமுதற்கடவுளிடம் அன்னை ஞானாம்பிகை வேண்டினாள்.

இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார், ஞானாம் பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் பெருஞ்சிவனிரவு நோன்பு நோற்றுத் தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

இப்பெரும் நோன்பு சுவிற்சர்லாந்து பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் மிகு சிறப்புடன் செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க, தெய்வத்தமிழில் அருட்சுனையர்கள் இறைதிருப்பாடல்கள் பாடி அளிக்க, அடியார்கள் யாவரும் தம் கரத்தால் திருமுழுக்கு முதல் அனைத்து வழிபாடுகளையும் ஆற்றினர்.

மாலை 16.00 மணிக்கு வழிபாடுகள் தொடங்கப்பெற்றது. 18.00 மணிமுதல் நடைபெற்ற பெருவழிபாடு 22.00 மணிக்கு நிறைவுற்றது. அடுத்து நள்ளிரவு 12.00 மணிக்கும், அதனைத் தொடர்ந்து 03.00 மணிக்கும் நிறைவில் விடிகாலை 06.00 மணிக்கும் திருமுழுக்கு பால், தேன், நெய், தயிர், நீர் கொண்டு ஆற்றப்பெற்றன.

சிறப்பு முத்தமிழ் இசை நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழத்து பன்முகக் கலைஞன் இந்திரன் குழுவினரின் சிறப்பு இசை நிகழ்வு இடம்பெற்றது. இவர்களுடன் உமாசதீஸ் அவர்களும் பங்கெடுத்தார்.

சுவிற்சர்லாந்தில் வாழும் பல கலைஞர்களும் குறிப்பாக திரு. அப்புத்துரை சண்முகதாஸ், இராசையா மகேஸ் அவர்களும் சிறப்பு மெல்லிசை வழங்கினர். ஈழத்து பாடல்களும் பக்தி இசையும் அடியார்கள் உள்ளம் நிறைய இசைக்கப்பட்டது.

நான்கு வேளையும் அருளமுது படைக்கப்பட்டு, அடியார்களுக்கு வழங்கி மகேச்சுர வழிபாடும் இடம்பெற்றது. வழிபாடுகள் 14. 02. 2018 புதன்கிழமை காலை 09.00 மணிக்கு நிறைவுற்றது.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே

எனும் சிவவாக்கியர் பாடல் ஒலிக்கும் பொருளாக அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரம் விளங்கிற்று அடியார்கள் யாவரும் சிவனருள் பெற்று நிறைந்தனர்.

பேர்ன் நகர் திருக்கைலை கண்ட நிறைவுடன் வழிபாடுகள் நிறைவுற்றது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்