மலேரியா ஆராய்ச்சிக்காக 100 மில்லியன் டொலர்கள் வழங்கும் சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

2016 ஆம் ஆண்டில் 445,000பேரின் உயிரிழப்புக்கு காரணமாக விளங்கிய கொசுக்கள் மூலம் பரவும் நோயான மலேரியா நோய்க்கான சிகிச்சை தொடர்பான ஆய்வுகளுக்காக சுவிஸ் பார்மசூட்டிக்கல் நிறுவனமான நோவார்ட்டிஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 100 மில்லியன் டொலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலுமாக 216 மில்லியன் பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டை விட ஐந்து மில்லியன் அதிகமாகும். மலேரியா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 90 சதவிகிதம் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

ஆனால் தென் கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கும் மலேரியா அபாயம் உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்நாட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் நியாயமான விலையை நிர்ணயிக்க நோவார்ட்டிஸ் முடிவு செய்துள்ளது.

இன்னும் ஒரு படி மேலே போய் மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

மலேரியாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளால் அந்நோய்க்கிருமிகள் சாகாமல் எதிர்த்து நிற்கும் ஒரு நிலைமை மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் சவாலாக உள்ளது என்று தெரிவித்துள்ள நோவார்ட்டிஸின் தலைவர் வாஸ் நரசிம்மன் அதனால்தான் அடுத்த கட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆய்வுகளில் தாங்கள் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்