சுவிற்சர்லாந்தில் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
21Shares
21Shares
lankasrimarket.com

சுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல்(CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.

பேர்ன் பல்கலைக்கழக வரலாற்றில் 700 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக பிற இனத்தவர், பிற சமயத்தவர் இக்கல்வியினைப் பெற்றுள்ளது வரலாற்று நிகழ்வாகப் பதியப்பட்டுள்ளது.

சைவசமயத்தின் பால் சைவநெறிக்கூடத்தின் பெயரில் திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் இவ் வெளிவாரிப் பட்டயக் கல்விக்கான தேர்வில் பல்சமய இல்லத்தின் உதவியுடன் தோற்றியிருந்தார்.

ஈராண்டு செயற்பாட்டு கோட்பாட்டுக் கல்விக்குப்பின்னர் இவர் தேர்விற்கு தோற்றியிருந்தார். சமயபோதனையில் நீண்டகால அனுபவம் உள்ள 14 நிபுணர்கள் இக்கல்வியினை மேற்கோண்டு நிறைவுத் தேர்வில் 10 சமயபோதகர்கள் தேர்வில் சித்தியடைந்திருந்தனர்.

ஈழத்தமிழ் சைவ அருட்சுனையரான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களும் சித்தி அடைந்து 28. 05. 2018 திங்கட்கிழமை பேர்ன் பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில், சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவன் அரசின் நீதி மற்றும் காவற்துறை அமைச்சர் திருமதி சமறூக்கா முன்னிலையில் பேராசிரியர் திருமதி ஈசாபெல் நோற்ரோ அவர்களிடமிருந்து பட்டயத்தினைப் பெற்றுக்கொண்டார்.

நடுவன் அரச அமைச்சர் அவர்கள் தனது உரையில், இங்கு கல்வியினைப் பயின்று நிறைவில் பட்டயச் சான்று பெற்றிருக்கும் உங்கள் அனைவரது கல்வி அறிவும் சுவிஸ் வாழ் அனைத்து மக்களுக்கும் நிறைவாகக் கிடைக்க வேண்டும். வேற்றுமைகளைக் களைய உங்கள் கல்வி பயன் படவேண்டும் என வாழ்த்தினார்.

இக்கற்கை நெறியினை வழிநடத்திய திருமதி ஈசாபெல் பேசுகையில் இதுவரைகாலமும் ஒரு சமயம் மட்டும் கோலாச்சிவந்த சமய நெறியால் ஆற்றுப்படுத்தல் எனும் துறையினை இன்று அனைத்துச் சமயத்தவர்களும் பெற வழிசெய்திருக்கிறோம்.

இதன் பெறுபேறாக இச்சமயத் தலைவர்கள் சட்டப்படி மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்களுக்குச் சென்று தமது கல்வியால் அவர்களை ஆற்றுப்படுத்தலாம். ஒரு மனிதரும் தனித்து விடப்பட்ட உணர்விற்குள் கட்டுப்படாமல் இன்னொரு மனிதன் உதவிக்கரம் அளித்து உள்ளத்தை ஆற்றுப்படுத்த வழிசெய்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இக்கற்கை நெறி வெற்றியளிக்க உதவிய அனைவருக்கும், சிறந்து கல்வி கற்று சித்தி அடைந்தவர்களுக்கும் இன்று பட்டமளிப்பு நிகழ்விற்கு வருகை அளித்திருக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் குறிப்பாக நடுவன் அரசின் அமைச்சர் திருமதி சமறூக்கா அவர்களுக்கும் தமது நன்றிகளை நவின்றார்.

இக்கல்வி பெற்றதன் பயன் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும், சிறைச்சாலைகளுக்கும், அகதிகள் முகாம்களுக்கும் ஆற்றுப்படுத்தல் பணிக்காக உள்நுழைய ஒப்புதல் பெற்றுக் கொடுக்கிறது. மேலும் பன்னாட்டு சபையின் சட்டத்தின் படி தடுப்பு முகாம்களுக்கும் உட்சென்று மக்களை ஆற்றுப்படுத்த இது வழி செய்கிறது என்பது குறிப்படத்தக்கதாகும்.

பலநூறு விருந்தினர்கள் வருகை அளித்திருந்தனர். நிறைவில் வருகை அளித்த அனைவருக்கும் பல்கலைக்கழகத்தால் சிற்றுண்டி விருந்து அளிக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்