ஆயுர்வேத மருத்துவத்தை அங்கீகரித்த முதல் மேற்கத்திய நாடு சுவிட்சர்லாந்து

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

மேற்கத்திய நாடான சுவிட்சர்லாந்து முதன் முதலில் ஆயுர்வேத மருத்துவ முறையை அங்கீகரித்த நிலையில், மக்களிடையே கிடைத்த பலத்த வரவேற்பால் அதனை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2009ஆம் ஆண்டு, அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அரசமைப்பு சட்டத்தில் மாற்று மருத்துவ முறை, சிகிச்சை, மருந்துகளை அங்கீகரிக்கும் பிரிவை உருவாக்க ஆதரவளித்து வாக்களித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டு சுவிஸ் அரசு ஆயுர்வேத முறை மருத்துவத்தை அங்கீகரித்தது. இதனால் ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் மருந்துகளை ஏற்றுக் கொண்ட ஒரே மேற்கத்திய நாடு எனும் பெருமையை பெற்றது.

ஆனால், மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்க கல்விமுறை, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறையும் தேவை என்பதை சுவிஸ் அரசு உணர்ந்துள்ளது. இதற்கு காரணம் அங்குள்ள பல ஆயுர்வேத மருத்துவர்கள் குறைந்த தகுதியும், அனுபவமுமே கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையாளர்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் முறையை மேலும் ஒழுங்குபடுத்த அந்நாட்டு அரசானது குழு ஒன்றை அமைத்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இங்கு ஆயுர்வேத மருத்துவத்துக்கும், மருந்துகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது.

எனவே, இதனை முறைப்படுத்தி ஒழுங்கு முறைக்குள் கொண்டுவர அரசு குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. மருத்துவர்களுக்கு முறைப்படி சட்ட அனுமதி, விற்கக் கூடிய மருந்துகளுக்கான சட்ட அனுமதி ஆகியவற்றை தீர்மானிக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஆனால் நம்பகத்தன்மையும், அங்கீகாரமும் இல்லாததால் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஆயுர்வேத மருத்துவத்துக்கான காப்பீட்டுத் தொகையை அளிக்க மறுத்து வருகின்றனர்.

இந்த விவகாரங்களை தீர்க்கவே இப்போது முறைப்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers