சுவிஸ் குடிமகள் உயிரிழப்பால் அதிர்ச்சியில் அயர்லாந்து: அதிபர் அஞ்சலி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அயர்லாந்தைத் தாக்கிய புயலில் சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Elvira Ferraii என்னும் பெண் Clifden Eco கடற்கரை பகுதியில் தனது கேரவனில் தங்கியிருக்கும்போது காலை சுமார் 7.45 மணியளவில் அந்த சம்பவம் நடைபெற்றது.

உச்சத்தில் இருந்த அலி புயல் கொண்டு வந்த பலத்த காற்றில் மலை முகட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட அவரது கேரவன் பல குட்டிக்கரணங்கள் அடித்து கடற்கரையில் வந்து விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அயர்லாந்து கடலோரக் காவல்படைக்கு உடனடியாக தகவல் வர, விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கேரவனுக்கு அருகே Elviraவின் உடலைக் கண்டனர்.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக Galway பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெரிய அலைகளாலும் தொடர்ந்து வீசிய காற்றினாலும் அவரது கேரவன் நொறுங்கிப்போனது.

Elviraவின் மரணம் அயர்லாந்தின் வட கன்னிமாரா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அயர்லாந்து அதிபரான Michael D Higgins உயிரிழந்த Elviraவின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் தங்கள் சக குடிமக்களுக்கு உதவும் அரசு மற்றும் தன்னார்வலர் அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers