கார்கள் அதிக சத்தத்தை ஏற்படுத்த வேண்டும்: சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் ஒரு வித்தியாசமான சட்டம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் அதிக சத்தத்தை எழுப்பவேண்டுமென ஒரு வித்தியாசமான சட்டம் அடுத்த ஆண்டு மத்தியில் வரவிருக்கிறது.

பாதுகாப்பு விதிகளின்கீழ் அனைத்து வாகனங்களிலும் Acoustic Vehicle Alerting System (AVAS) என்னும் கருவி பொருத்தப்படவேண்டும்.

இந்த கருவி, வாகனம் வருவதைக் குறித்து பாதசாரிகள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

முக்கியமாக, கண் பார்வையற்றோர் மற்றும் பகுதி கண் பார்வை இல்லாதோருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

சத்தமில்லாமல் இயங்கும் கார்களால் கண் பார்வையற்றோர் மற்றும் பகுதி கண் பார்வை இல்லாதோருக்கு மோசமான அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி உலக கண் பார்வையற்றோர் சங்கம் மற்றும் ஐரோப்பிய கண் பார்வையற்றோர் சங்கம் ஆகியவை அழுத்தம் கொடுத்ததையடுத்து இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் கண் பார்வையற்றோர் சங்கம் இந்த முடிவை வரவேற்றுள்ளது.

எங்கள் காதுகள்தான் எங்களுக்கு கண்கள், கார்கள் வரும் சத்தம் எங்களுக்கு கேட்காவிட்டால் எங்களால் சுதந்திரமாக இயங்க இயலாது என்று சுவிஸ் கண்பார்வையற்றோர் சங்கத்தின் செய்தி தொடர்பாளரான Joel Favre கூறினார்.

இதற்கிடையில் சுவிட்சர்லாந்தில் ஓடும் 4.5 மில்லியன் கார்களில் 15,000 மட்டுமே மின்சாரத்தால் இயங்கும் கார்கள் என்றும் 67,000 கலப்பின வகை என்றும் சுவிஸ் ஃபெடரல் சாலைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் காற்று மாசுவை குறைக்கும் நோக்கில், 2020 வாக்கில் சுவிட்சர்லாந்து முழுவதும் மொத்தத்தில் 15 சதவிகித வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் என சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers