சூரிச்சில் ரயில் விபத்தில் சிக்கி இளைஞர் பலி: முரணான தகவல்களை தெரிவித்த நண்பர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இளைஞர் ஒருவர் மது போதையில் தண்டவாளத்தில் தள்ளாடிய நிலையில் ரயில் மோதி பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞர் மது அருந்துவதில்லை எனவும், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிச்சில் ஞாயிறன்று மாலை சுமார் 6.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக மாகாண பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தண்டவாளம் வழையாக குறித்த இளைஞர் நடந்து சென்றதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவர் அப்பகுதி வழியாக சென்றதன் காரணம் தொடர்பில் எவருக்கும் தெரியவில்லை என பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

ரயில் விபத்தில் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரியவில்லை எனவும் மாகாண பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே குறித்த இளைஞருக்கு 19 வயது இருக்கலாம் எனவும், அவரது நண்பர்கள் மத்தியில் மதிப்பு மிக்க இளைஞர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய இரு இளைஞர்கள், தாங்கள் மூவரும் மிக குறைந்த அளவுக்கு மது அருந்தியதாகவும், குடியிருப்புக்கு திரும்பும் வழியில் அவர் மட்டும் தனியாக சென்றதாகவும்,

அவரது மரணத்திற்கு என்ன காரணம் என தங்களால் யூகிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விபத்தில் கொல்லப்பட்ட இளைஞர் மது அருந்தும் பழக்கம் இல்லாதவர் எனவும் தமது எதிர்காலம் குறித்து மிகுந்த கனவுகள் கொண்டவர் எனவும் அவரது ஒருசில நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாண பொலிசாரின் விசாரணைக்கு பின்னரே இந்த விவகாரம் தொடர்பில் உண்மை வெளிவரும் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்