கர்ப்பிணியான அகதிக்கு உதவ மறுத்த விவகாரம்: சுவிஸ் எல்லை பாதுகாப்பு காவலருக்கு சிக்கல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கர்ப்பிணி அகதிக்கு உதவ மறுத்த விவகாரத்தில் எல்லை பாதுகாப்பு காவலருக்கு எதிராக பெர்ன் ராணுவ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சூரிச் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த இந்த விவகாரத்தில் குறித்த எல்லை பாதுகாப்பு காவலர் மீது கடமையில் தவறியது, அலட்சியம், கருச்சிதைவுக்கு தூண்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் 58 வயதான அந்த எல்லை பாதுகாப்பு காவலர் மீது பெர்ன் ராணுவ நீதிமன்றம் சுமத்திய கொலை முயற்சி குற்றத்தை சூரிச் மேல்முறையீடு நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளது.

மேலும் தண்டனை காலத்தையும் குறைத்து சூரிச் மேல்முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அபராத தொகையை 9,000 பிராங்குகளில் இருந்து 22,000 என அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு யூலை மாதம் சிரியா அகதிகள் சிலர் இத்தாலியில் இருந்து ரயில் மூலம் சுவிஸ் வழியாக பிரான்ஸ் செல்ல முயன்றுள்ளனர்.

இந்த குழுவினரில் 22 வயதான 7 மாத கர்ப்பிணி ஒருவரும் பயணப்பட்டுள்ளார். குறித்த குழுவினரை பிரான்ஸ் சுவிஸ் எல்லையில் மடக்கிய அதிகாரிகள்,

அவர்களை பேருந்துகளில் இத்தாலி நாட்டுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். இந்த பயணத்தின் இடையே குறித்த கர்ப்பிணி யுவதிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது.

பலமுறை சுவிஸ் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம் உதவிக்கு கோரியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி Brig ரயில் நிலையத்தில் கர்ப்பிணி யுவதியையும் அவரது 2 வயது மகனையும் எந்தவித மருத்துவ உதவியும் இன்றி சுமார் 4 மணி நேரம் சிறை வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அதன்பின்னர் அவர்கள் இத்தாலிக்கு சென்றதாகவும், அங்கே எல்லையில் அமைந்துள்ள நகர் ஒன்றில் குறித்த கர்ப்பிணி யுவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், குழந்தை இறந்தே பிறந்தது எனவும் கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers