ஜெனீவாவுக்கு நடைபயணம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர்: நல்லெண்ண பின்னணி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இந்திய சமூக ஆர்வலர் ஒருவர், புது டெல்லியிலிருந்து ஜெனீவா வரை சமாதானத்திற்காக நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, புது டில்லியிலிருந்து தொடங்கி 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்25ஆம் திகதி, ஜெனீவாவில் தனது நடைபயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் ராஜகோபால் என்னும் அந்த சமூக ஆர்வலர்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்.

70 வயதான பொறியாளரான ராஜகோபால், பாகிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி வழியாக சுவிட்சர்லாந்தின் சமாதான நகரமாகிய ஜெனீவா சென்றடைய இருக்கிறார்.உலகில் அதிகரித்துவரும் முரண்பாடுகளுக்கும் அருகிவரும் இயற்கை வளங்களுக்கும் உள்ள தொடர்புகளை நோக்கி உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அவர் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

ஏழை மக்களிடமிருந்து நிலம், காடுகள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை பறித்துக் கொண்டால், சமுதாயத்தில் அமைதியின்மை ஏற்படும், அது முரண்பாட்டுக்கு வழிவகுக்கும், அதனால் பெரிய அளவில் வன்முறை ஏற்படும் என்று கூறும் ராஜகோபால், உலகின் இன்றைய தேவை சமாதானம், அதனால்தான் உலகம் முழுமைக்கும் சமாதானத்தை உருவாக்கும் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளோம் என்கிறார்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பல சவால்கள் உள்ளதாக தெரிவிக்கும் அவர், நடைபயணத்தில் அவருடன் பங்குபெறுவோர் விசா பெறுவதில் பல பிரச்சினைகள் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதனால் அவர்கள் மும்பையிலிருந்து கிரீசுக்கு படகில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அங்கிருந்து நடைபயணத்தை தொடர இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

புதிய காந்தி என தான் அழைக்கப்படுவது குறித்து அசௌகரியமாக உணர்வதாகத் தெரிவிக்கும் ராஜகோபால், தலாய் லாமா மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளும் திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஜெனீவாவிற்கு நடைபயணமாக சென்றடைந்ததும், அங்கு ஒரு வாரத்திற்கு சமாதானம் மற்றும் அஹிம்சை குறித்த விவாதங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers