சுவிஸ் தொண்டு நிறுவனங்களை சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்ட பிரபலம்: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் Ferdinand Marcosஇன் மனைவியாகிய இமெல்டா மார்க்கோஸ், சுய லாபத்திற்காக சுவிட்சர்லாந்தில் தொண்டு நிறுவனங்களை நிறுவியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

தொண்டு நிறுவனங்கள் என்று பெயர் வைத்திருந்தாலும், இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் நிதி தொடர்பான செயல்பாடுகளிலேயே அதிகம் ஈடுபட்டுள்ளதோடு, அதன் பயனாளிகளாக மார்க்கோஸின் குடும்பத்தினரையே கொண்டுள்ளன.

இமெல்டா மீது ஊழலுக்கு எதிரான சட்டம் பிரிவு 3(h)ஐ மீறியதாக ஏழு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இமெல்டாவுக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் 6 முதல் 11 ஆண்டுகள் வரை, அதாவது மொத்தத்தில் 42 முதல் 77 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்த நிறுவனங்களில் சுமார் 200 மில்லியன் டொலர்கள் வரை மார்க்கோஸ் குடும்பத்தினர் முதலீடு செய்த விடயம் வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களாக வகைப்படுத்தப்படாததால் குற்றங்களுக்கு அவரை பொறுப்பாக்கக்கூடாது என இமெல்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் சட்ட விரோதமாக இமெல்டா அந்த நிறுவனங்கள் உருவாக்கத்தில் தீவிர பங்கேற்றதாகவும் அவற்றிலிருந்து லாபமடைந்ததாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இமெல்டா மீது சாட்டப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இப்போதுதான் தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்