சுவிட்சர்லாந்தில் சூனியம் வைப்பதாக மிரட்டி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நைஜீரியாவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று Lausanne நீதிமன்றம் ஒன்று, மனிதக் கடத்தல், சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் சுவிஸ் வெளிநாட்டவர் சட்டத்தை மீறுதல் ஆகிய குற்றங்களுக்காக 36 வயதான ஒரு நைஜீரியப் பெண்ணுக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
அவளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1,800 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததோடு, தண்டனைக் காலம் முடிந்ததும் அவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவள் எட்டு ஆண்டுகளுக்கு மீண்டும் சுவிட்சர்லாந்துக்குள் கால் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Christina என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணும் சுவிட்சர்லாந்தில் ஒரு பாலியல் தொழிலாளியாக வேலை செய்திருக்கிறாள்.
படிக்க வைப்பதாகக் கூறி 16 முதல் 18 வயதுக்குட்பட்ட நான்கு இளம்பெண்களை அழைத்துக் கொண்டு வந்த Christina, சுவிட்சர்லாந்துக்குக்கு செல்லும் முன் தனது சகோதரனின் உதவியுடன் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, juju என்று அழைக்கப்படும் மதச் சடங்கு ஒன்றை நடத்தியுள்ளார்.
நைஜீரியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு சென்றதும் அந்தப் பெண்கள் பாலியல் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப்பட்டார்கள்.
அந்த பெண்களிடம் தனக்கு 35,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை கொடுக்க வேண்டும் என்றும், ஓடிப்போனாலோ பொலிசுக்கு தகவல் கொடுத்தாலோ jujuவினால் ஏற்பட்ட சாபத்தினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
நைஜீரியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வருவதற்காக தான் பணம் செலவழித்துள்ளதாகவும், அந்த பணத்தை பாலியல் தொழில் செய்து தனக்கு திருப்பித்தர வேண்டும் என்றும் Christina வற்புறுத்தியதாக அவரால் கடத்திக் கொண்டுவரப்பட்ட இளம் பெண்களில் ஒருவர் தெரிவித்தார் .
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது என்றாலும், பாலியல் தொழிலுக்காக பெண்களைக் கடத்துவது சட்ட விரோதமாகும்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரையில் பெரும்பாலான புகார்கள் நீதிமன்றத்திற்கு வருவதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.