சுவிட்சர்லாந்தில் யுவதியை தாக்கி வாகனத்தை பறித்துச் சென்ற கும்பல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று யுவதி ஒருவரை தாக்கிவிட்டு அவரது வாகனத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் மண்டலத்தில் கடந்த வியாழனன்று பகல் வேளையில் குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின்போது சூரிச் மண்டல பொலிசார் குறித்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது சூரிச் மண்டல உரிமம் கொண்ட கார் ஒன்று சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் வேகமாக கடந்து சென்றுள்ளது.

அதில் மூன்று பேர் பயணமானதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தை பொலிசார் தடுத்து நிறுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்காத நிலையில்,

வேகமாக சென்ற அந்த வாகனத்தை பொலிசார் அதிரடியாக துரத்திச் சென்றுள்ளனர்.

ஆனால் பொலிசாரின் கண்ணில் சிக்காமல் அந்த மூவர் கும்பல் மாயமாகியுள்ளது. இந்த நிலையில் யுவதி ஒருவர் பொலிசரை அணுகி தமக்கு நேர்ந்த துயரம் தொடர்பில் புகார் அளித்துள்ளார்.

அதில் மூவர் கும்பல் ஒன்று தமது வாகனத்தை நிறுத்திவிட்டு தம்மை தாக்கியதாகவும், பின்னர் தம்மை காரில் இருந்து இழுத்து வெளியே தள்ளிவிட்டு வாகனத்துடன் மாயமானதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த புகார் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சூரிச் மண்டல பொலிசார், சாலையில் யுவதியை தாக்கி காரை பறித்துச் சென்றவர்களும் பொலிசார் முயன்றும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்களும் ஒரே கும்பலே என தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிசாரிடம் இருந்து தப்பிய மூவரும் விபத்தில் சிக்கியதாகவும், அதன் பின்னர் யுவதியை தாக்கி அவரது காரை பறித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை அந்த மூவர் கும்பல் பொலிசில் சிக்கவில்லை என்றே தெரியவந்துள்ளது. குறித்த மூவர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers