சுவிட்சர்லாந்தில் கொடூர கணவரால் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த துயரம்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மனைவியின் விருப்பத்திற்கு எதிராக தாயாருடன் இணைந்து கணவர் ஒருவர் கருக்கலைப்புக்கு மருத்துவரை நாடிய சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது கருக்கலைப்புக்கான சட்டப்பூர்வ நிலை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கோடை காலத்தில் கோசோவா நாட்டவரான குறித்த 26 வயது பெண்மணி தமது கணவருடன் சுவிட்சர்லாந்தில் உள்ள குடும்பத்தாருடன் இணைந்துள்ளார்.

பாஸல் மண்டலத்தில் அந்த பெண்மணியின் மாமியார் நீண்ட காலமாக குடியிருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்துக்கு வந்த சில நாட்களிலேயே குறித்த பெண்ணை அந்த தாயார் தமது மகனுடன் இணைந்து கொடுமைப்படுத்த துவங்கியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அந்த 26 வயது இளம்பெண். மட்டுமின்றி தனியாக வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

தொலைபேசி பயன்படுத்தவும் மறுக்கப்பட்டுள்ளது. கணவரும் அவரது தாயாரும் வெளியே செல்லும் வேளைகளில் இவரை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்லும் கொடூரமும் நடந்துள்ளது.

மட்டுமின்றி கணவரால் நிரந்தர தாக்குதலுக்கும் அவர் உள்ளாகி வந்துள்ளார். இருப்பினும் மனைவியுடன் குடும்பம் நடத்த அவர் தயங்கியதில்லை.

இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாம் கருவுற்றிருக்கும் தகவலை கணவரின் தாயாரிடம் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதை தமது மகனிடம் தெரிவித்த தாயார், தொடர்ந்து இருவரும் மகப்பேறு மருத்துவரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மகப்பேறு மருத்துவரும் அந்த பெண்மணி கருவுற்றிருப்பதாக உறுதி செய்த நிலையில், மருத்துவரிடம் அந்த தாயார் தமது மருமகளின் கருவை கலைக்க கோரிக்கை வைத்துள்ளார்.

தாயாரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல் அந்த நபரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

கொசோவா இளம்பெண்ணுக்கு ஜேர்மன் மொழி தெரியாததால் தமது மாமியாரும் கணவரும் மருத்துவரிடம் என்ன பேசுகிறார்கள் என்பது அவருக்கு தெரியாமலே போனது.

இந்த நிலையில் அந்த மருத்துவருடன் மேற்கொண்ட 3-வது சந்திப்பின்போது அவர் குறித்த பெண்மணிக்கு தெரியப்படுத்தாமலே கருவை கலைத்துள்ளார்.

இச்சம்பவம் பின்னர் தெரியவந்த நிலையில் கொந்தளித்துப்போன அந்த கொசோவா இளம்பெண், தமது குடியிருப்பில் இருந்து உதவி கேட்டு முறையிட்டு பாதசாரி ஒருவரால் பொலிசாருக்கு தெரியப்படுத்தி, அவர்களால் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கானது எதிர்வரும் பிப்ரவரி 5 ஆம் திகதி பாஸல் மண்டல குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்