சுவிட்சர்லாந்தில் மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு பொலிசுக்கு தகவல் அளித்த கணவன்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் நம்பிக்கை துரோகம் செய்ததாக கூறி மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அதிகாலையில் குடியிருப்புக்கு திரும்பிய குறித்த கணவன், படுக்கையறையில் தூக்கத்தில் இருந்த மனைவியை, சமையல் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் ஏற்பட்ட காயங்களால் அந்த பெண்மணி படுக்கையில் கிடந்தவாறே மரணமடைந்துள்ளார்.

மனைவியின் மரணத்தை உறுதி செய்த அந்த நபர், கோபி ஒன்றை குடித்த பின்னர், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

நம்பிக்கை துரோகம் செய்த மனைவியை தாம் கொலை செய்ததாகவே பொலிசாரிடம் தொலைபேசியில் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் அந்த நபர் சுவிஸ் பெண்மணியை திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் இருவரது திருமண வாழ்க்கை கொந்தளிப்பு மிகுந்ததாகவே அமைந்துள்ளது. இருவரும் உளவியல் ஆலோசனைகள் பெற வேண்டும் என நண்பர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமண வாழ்க்கை சீர்குலைந்த நிலையில் இருவரும் போதை மருந்து மற்றும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.

2016, பிப்ரவரி 6 ஆம் திகதி மது போதையில் குடியிருப்புக்கு திரும்பிய கணவன், படுக்கையில் படுத்திருந்த மனைவியை சமையல் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவரது உயிர்பிரிந்துள்ளது.

மனைவியை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டமேதும் தமக்கு இருந்திருக்கவில்லை எனவும், மதுபோதையில் இருந்ததால் அப்போதைய சூழலில் கொலை செய்துவிட்டதாகவும் அவர் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் குறித்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்