ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் விகாரிவருட பெருந்திருவிழா பக்திபூர்வமாக ஆரம்பம்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

ஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

கதிரவேலனின் விகாரிவருட பெருந்திருவிழா நேற்று முன்தினம் காலை விசேட அபிஷேகத்துடன் ஆரம்பமானது.

முற்பகல் 10.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. கதிர்வேலர் எழுந்தருளி முற்பகல் 11.00 மணிக்கு அந்தணர்களின் வேதம் ஒலிக்க, தமிழ் மறையாகிய திருமுறைகள்,கொடிக்கவி பாட, மங்களவாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

லண்டனிலிருந்து வருகைதந்துள்ள சிவாகமரத்னம், வேதாகம விசாரதா ந.ராமு(எ)அகத்தீஸ்வரக்குருக்கள் கொடியேற்றி வைத்தார்.

சிவாகமரத்னம், கிரியா கலாமணி முத்துமீனாட்சிசுந்தரம் முத்துச்சாமிக்குருக்கள், முத்தமிழ்ச் செல்வர் சிவஸ்ரீ கஜேந்திரக்குருக்கள், சிவாச்சாரிய ரத்னம் சிவஸ்ரீ சோம சிறிகரக்குருக்கள் உட்பட அந்தணர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர்.

கொடியேற்றத்தை அடுத்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட பூசையை அடுத்து ஆலயக்கொடியை ஆலய பிரதமகுரு முத்துச்சாமி குருக்களும், இடபக் கொடியை கூர் விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கஜேந்திரக்குருக்களும், சுவிஸ் நாட்டுக் கொடியை திரு 50 உரிமையாளர் ஜயாத்துரை திருச்செல்வமும் ஏற்றி வைத்துள்ளனர்.

இதேவேளை, மாநிலக் கொடியை ஏ.என்.தர்மரத்தினம்(சிறுவன்), கிராமக்கொடியை ஆறுமுகம் செந்தில்நாதனும் உற்சவகாரர் சூழ ஏற்றி வைத்தனர்.

செங்காலன் நாதசுர வித்துவான் மா.செந்துரன் தலைமையில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தவில் வித்துவான் மு.நாகேந்திரம் மற்றும் நாதசுர வித்துவான் குணதாஸ் மோகனதாஸ், தவில் வித்துவான் சுதா கோபி ஆகியோரின் மங்கள இசை தினமும் இடம்பெற்றுவருகிறது.

இப் பெருந்திருவிழாவில் இரண்டாம் நாள் 108 சங்காபிசேகம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாம்நாள் திருவிழா நாளை இடம்பெறவுள்ளது.

மேலும், சக்திரூபக்காட்சிகொடுத்து திருமுறைப் பாராயணத்துடனும் 4 ஆம் திருவிழா (20.05.2019) குருந்தமரத் திருவிழாவாகவும் நடைபெற்று, 5 ஆம் திருவிழா (21.05.2019) கப்பல் திருவிழாவாகவும், 6 ஆம் திருவிழா (22.05.2019) மாம்பழத் திருவிழாவாகவும், 7 ஆம் திருவிழா (23.05.2019) வேட்டைத்திருவிழாவாகவும்,

8 ஆம் திருவிழா (24.05.2019) சப்பறத்திருவிழாவாகவும் நடைபெற்று சனிக்கிழமை (25.05.2019) காலை 07.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி கதிர்வேலர் தேரில் பவனி வரவிருக்கிறார். அடுத்தநாள் தீர்த்தத்திருவிழா நடைபெற்று அன்று மாலை 17.30 மணிக்கு ஊஞ்சல்பாட்டு கொடியிறக்கம் நடைபெறவிருக்கின்றன.

மறுநாள் திங்களன்று திருக்கல்யாணமும் செவ்வாயன்று வைரவர்மடையும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்