சுவிஸில் 15 மில்லியன் பிராங்குகள் மொத்தமாக கொள்ளையிட்ட கும்பல்: திணறும் விசாரணை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் 15 மில்லியன் பிராங்குகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் மூவர் கைதாகியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் மட்டும் 13 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சுவிஸ் குடிமக்கள் மூவரை தற்போது கைது செய்துள்ளதாக மண்டல பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கைதான மூவரும் வோட் மண்டலத்தில் குடியிருப்பவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடந்த இச்சம்பவம் திரைப்பட பாணியில் அமைந்ததாக கூறப்படுகிறது.

பிரான்ஸின் லியோன் நகரில் குடியிருக்கும் பெண்மணி ஒருவரை கும்பல் ஒன்று குடியிருப்பில் புகுந்து உதவுவதாக நடித்து கடத்தி சென்றுள்ளது.

அவரை கட்டிப்போட்ட அந்த கும்பல் வலுக்கட்டாயமாக சுவிட்சர்லாந்தில் உள்ள அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைக்க நிர்பந்தித்துள்ளது.

குறித்த நபர் சுவிஸில் வங்கிகளுக்கு பணம் கொண்டுசெல்லும் வாகன சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.

அவரிடம் தங்கள் கோரிக்கையை அந்த கும்பல் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், குறித்த நபர் சுமார் 15 மில்லியன் பிராங்குகள் தொகையை வோட் மண்டலத்தில் ஆயுதம் ஏந்திய மூவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து லியோன் நகரில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் சாலை ஓரத்தில் இருந்து குறித்த பெண்மணி மீட்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில், பணத்தை கொள்ளையர்களிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் அவரது உதவியாளர், மற்றும் சாரதியின் கடத்தப்பட்ட மகள் என மூவரையும் பல நாட்கள் விசாரணைக்கு பின்னர் பொலிசார் விடுவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பிரான்சில் 13 பேரும், தற்போது சுவிட்சர்லாந்தில் மூவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers