கடத்தல்காரரை விரட்டிப் பிடித்த சுவிட்சர்லாந்து பொலிசார்: அவரது காரில் என்ன இருந்தது தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
256Shares

சுவிட்சர்லாந்தில் வாகன சோதனையின்போது தப்பியோடிய ஒரு ஜேர்மானியரை விரட்டிப்பிடித்த பொலிசார், அவரது காரை சோதனையிட்டபோது அதில் 12 தேன் கூடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

Bargen என்னும் பகுதி வழியாக எல்லையைக் கடந்து அவர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்றதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு, அவர் St Margrethen வழியாக மீண்டும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்றார்.

சுங்க அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, அவர் காரை திருப்பிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.

சைரன் ஒலிக்க, பொலிஸ் வாகனங்கள் விளக்குகளை எரியவிட்டபடி அவரை துரத்தின. எல்லைக்கருகில் அவர் பொலிசாரிடம் சிக்கினார்.

அவரது காரை சோதனையிட்டபோது அதில் 12 தேன்கூடுகள், தேனீக்களுடன் இருப்பதை பொலிசார் கண்டனர்.

அவற்றை பறிமுதல் செய்த பொலிசார் விலங்குகள் நல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த தேனீக்கள் எங்கிருந்து வந்தவை என்பதற்கான மற்றும் அவற்றின் உடல் நலம் குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த 12 காலனி தேனீக்களும் அழிக்கப்பட்டன.

அவற்றிற்கு ஏதேனும் நோய் இருந்தால், அவை சுவிட்சர்லாந்திலுள்ள மற்ற தேனீக்களுக்கும் பரவி விடலாம் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவை அழிக்கப்பட்டன.

அரசு ஊழியர்களின் பணிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு, அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர் VATம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்