சுவிட்சர்லாந்தில் சித்திரவதை முகாம்கள்: அழகிய சுவிட்சர்லாந்தின் அழுக்கு முகம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உலகமே ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என ஆசைப்படும் அழகிய சுற்றுலாத்தலமான சுவிட்சர்லாந்துக்கு, மோசமான இன்னொரு முகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

வீட்டை விட்டு ஓடிப்போய் கர்ப்பமான ஒரு பதின்ம வயது பெண், கொஞ்சம் பெண்மை இருந்ததால் பாதிரியார்களால் வன்புணர்வு செய்யப்பட்ட அழகான இளைஞன், கூலியே இல்லாமல், வேலை செய்வது மட்டுமே முழு நேரக் கடமையாக செய்ய வற்புறுத்தப்பட்ட இளைஞர் என பலதரப்பட்டோர், தாங்கள் காரணமே இன்றி சிறையில், முகாம்களில், வாழ்நாளின் பெரும்பகுதியையும் செலவிட்ட சோகங்களைக் கூறி இப்படி ஒரு அசிங்கமான முகம் சுவிட்சர்லாந்துக்கு இருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

ஜேர்மனியின் ஹிட்லர் கால சித்திரவதை முகாம்கள் போன்ற முகாம்களில், கேட்க நாதியின்றி அடைக்கப்பட்டிருந்த இந்த ‘கைதிகள்’ செய்த ஒரே தவறு, அவர்கள் வித்தியாசமாக இருந்ததுதான்.

இன்று 72 வயதாகும் Hubert Meyer, தனது கதையை சொல்ல திணறுகிறார். சற்று பெண்மை அதிகம் இருந்ததால் நளினம் கலந்திருந்த Hubertஐ பாதிரிகள் தங்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தொடர்ந்து வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட Hubert, பின்னர் முகாம்களில் அடைக்கப்பட்டதோடு, மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் ‘குணமாக்கப்படுவதற்காக’ அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

Daniel Cevey (76), ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். ஒரு நாள் அவரை முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள், எதற்காக என்று அவருக்கு இதுவரை தெரியாது.

அங்கு உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் பணி செய்ய அவர் வற்புறுத்தப்பட்டார். இத்தனை வருடங்களும் பள்ளிக்கு செல்வதற்கு பதில் நாங்கள் வேலைக்கு சென்றோம் என்று கூறும் Danielக்கு, ஊதியமாக எதுவுமே கொடுக்கப்படவில்லையாம்.

இந்த ஒவ்வொருவரும், முகாம்களில் தாங்கள் அனுபவித்த சித்திரவதைகள் இன்னும் தங்களுக்கு அச்சத்தை ஊட்டுவதாக தெரிவிக்கிறார்கள்.

மே மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, முகாம் ஒன்றின் அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி ஒன்றின் விளைவாக கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விலா எலும்புகள் உடைந்திருந்ததைக் கண்டறிந்தது.

அதாவது அந்த நபர்கள் மோசமாக தாக்கப்பட்டதில் அவர்களது எலும்புகள் முறிந்திருந்தது தெரிய வந்தது.

Ursula Biondiயின் தந்தை ஒரு முரடர், இனிமையான குழந்தைப்பருவம் அந்த சிறுமிக்கு கிட்டவில்லை.

15 வயதில் வீட்டு வேலை செய்வதற்காக அனுப்பப்பட்ட அவர், வேலை செய்த வீட்டின் தலைவரால் தொடர்ந்து வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார்.

17 வயதானபோது, ஒரு இளைஞனுடன் காதல் ஏற்பட, இத்தாலிக்கு ஓடிப்போனார்கள் இருவரும்.

ஆனால் கர்ப்பமானதும், அவர் மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார், சிறையிலும் அடைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, அது அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. பின்னர் பல மாதங்கள் போராட்டத்திற்கு பின்னரே அவர் அந்த குழந்தையை மீட்க முடிந்தது.

பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த Ursula, பின்னர் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக போராட ஆரம்பித்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைப்பதற்காக அவர் போராடி வருகிறார்.

பல வெற்றிகளும் அவருக்கு கிடைத்தன. 2010ஆம் ஆண்டு, நீதி அமைச்சகம் முன்னாட்களில் முகாம்களில் அடைக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

2014ஆம் ஆண்டு, நாடாளுமன்றம் முதன்முறையாக சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டோர் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டது.

முன்னாள் ‘கைதிகள்’ ஒவ்வொருவருக்கும் 25,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்கப்பட்டது.

ஆனால் பல்ரும் இது மிகவும் குறைவு என கருதுகிறார்கள்.

ஏனென்றால் அவர்களில் பலரும் இன்னும் வறுமையில் உழல்கிறார்கள், அவர்களது கல்வி, வேலைத்திறன் என எல்லாவற்றையும் முகாம் வாழ்க்கை திருடிக் கொண்டதால், அவர்களால் சரியான ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியவில்லை.

இப்படி ஒரு மோசமான நிலையில் வாழ்வோருக்கு, இது முகத்தில் அறைந்தது போலாகும் என்கிறார் Ursula.

அதைவிட மோசம், குற்றம் செய்தோர், அதாவது, இந்த முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்படுவதற்கு காரணமானவர்கள், அவர்களை சித்திரவதை செய்தோர், உழைப்பைத் திருடிக் கொண்டு ஊதியம் தர மறுத்தோர் என யாருமே தண்டிக்கப்படவில்லை என்று கூறும் Ursula, அப்படிப் பார்த்தால், அந்த மோசடி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers