சிங்கப்பூரை வீழ்த்தி முன்னேறிய சுவிட்சர்லாந்து: எந்த விடயத்தில்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வெளிநாட்டினர் வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் உகந்த நாடு என்னும் பெயரை வைத்திருந்த சிங்கப்பூரிடமிருந்து அதை சுவிட்சர்லாந்து தட்டிப்பறித்துள்ளது.

HSBC Holdings Plc நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பெரிய வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொண்ட நாடான சுவிட்சர்லாந்து, வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 8ஆவது இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து, தனது சம்பாத்தியத் திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திற்கு வந்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 33 நாடுகளில், வெளிநாட்டவர்களுக்கு சராசரியாக 111,587 டொலர்கள் ஊதியம் வழங்கும் சுவிட்சர்லாந்து, 75,966 டொலர்கள் ஊதியம் வழங்கும் மற்ற நாடுகளை விட 47% அதிக ஊதியம் வழங்குகிறது.

ஆய்வுக்குட்படுத்த 10 வெளிநாட்டவர்களில் 7பேர் சுவிட்சர்லாந்துக்கு வந்தபின் தாங்கள் அதிக ஊதியம் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை செய்வோர், வெறும் ஊதியத்தை மட்டும் பார்ப்பதில்லை, வேலை - வாழ்க்கை சமன்பாடு, குழந்தைகளை வளர்ப்பதற்கேற்ற சூழல், பாதுகாப்பு என பல விடயங்களை எதிர்பார்க்கும் நிலையில், அவை அனைத்தையும் சுவிட்சர்லாந்து வழங்குவதால்தான் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர், இந்த முறை இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

22ஆவது இடத்தில் இருந்த துருக்கி, வெகுவாக முன்னேறி 7ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

ஆனால் பிரித்தனியா ஏழு இடங்கள் கீழிறங்கி 27ஆவது இடத்திற்கு சென்று விட்டது. பிரெக்சிட்டால் ஏற்பட்டுள்ள உறுதியில்லாத்தன்மை இதற்கு காரணம் என கருதப்படுகிறது.

அதேபோல் 7ஆவது இடத்திலிருந்த ஸ்வீடன் 20ஆவது இடத்திற்கு சென்றுவிட்டது.

பொருளாதார நிலைத்தன்மையும் வேலை - வாழ்க்கை சமநிலையும் ஸ்வீடனுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தந்தாலும், வெளிநாட்டவர்கள் நண்பர்களைக் ஏற்படுத்திக் கொள்வதிலும் தங்கள் வேலைத்திறனை முழுமையாகக காட்டுவதிலும் பிரச்சினைகளை சந்திப்பதால் ஸ்வீடனால் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்