ஆயுதங்களுடன் இத்தாலியில் கைதான சுவிஸ் நாட்டவர்: ஏவுகணை வைத்திருந்ததால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இத்தாலியில் வலது சாரி தீவிரவாத எண்ணங்கள் கொண்ட குழுக்களை குறி வைத்து நடத்தப்பட்ட ரெய்டுகளின்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சுவிஸ் நாட்டவரும் இருந்ததோடு அவர்களிடமிருந்து ஒரு ஏவுகணையும் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு விமானத்திலிருந்து இன்னொரு விமானத்தை தாக்கக்கூடிய அந்த ஏவுகணை, 3.5 மீற்றர் நீளம் கொண்டதும், 500,000 யூரோக்கள் மதிப்புடையதும் ஆகும்.

இப்படி ஒரு ஏவுகணை எப்படி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டவர், இத்தாலிய மொழி பேசும் Ticino பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் இத்தாலியின் Forli விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவருடன் இன்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தாலியின் பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெய்டுகளின்போது நியோ நாஸி பிரச்சார துண்டுப்பிரதிகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு உக்ரைனிலுள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாத போராட்டக் குழுக்களுக்கு இத்தாலிய வலது சாரியினர் உதவுவதாக கிடைத்த தகவலின் பேரிலேயே, இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.

Turin நகரின் சிறப்பு பொலிஸ் படையான Digos என்னும் படையின் தலைமையில், மிலன், வரேஸ், ஃபோர்லி மற்றும் நொவாரா நகர பொலிசாரும் இணைந்து இந்த ரெய்டுகளில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டவரின் பெயர் Alessandro Monti (42) என்றும், மற்ற இருவர் பெயர் Fabio Del Bergiolo (50) மற்றும் Fabio Bernardi(51) என்றும், இவர்கள் இருவரும் இத்தாலியர்கள் என்றும் இத்தாலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களில் Fabio Del Bergiolo, ஒரு முன்னாள் சுங்கத்துறை அதிகாரியும், வலதுசாரி அமைப்பு ஒன்றை சேர்ந்தவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்